இயக்குனர் மணிரத்னம் டைரக்ஷனில் நடிகர் கமல்ஹாசன் நடித்துவரும் படம் தக்லைப். கடந்த 4 மாதங்களுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் சிலம்பரசனும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். நடிகைகள் திரிஷா, அபிராமி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
டெல்லி, ராஜஸ்தான், ஐதராபாத், சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு சுறுசுறுப்பாக நடத்தப்பட்ட நிலையில், அடுத்தக்கட்டமாக கேரளாவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. பாண்டிச்சேரியில் ஹெலிகாப்டரில் பரபரப்பான ஒரு சண்டைக்காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த ஹெலிகாப்டர் சண்டை காட்சியின் போது, ஹெலிகாப்டரில் இருந்து குதிக்கும் காட்சியில் நடித்த மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் கால்களில் பலத்த காயமடைந்தார். அதனால் அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் செய்யப்பட்ட நிலையில், 10 நாட்கள் படப்பிடிப்பை மணிரத்னம் தள்ளி வைத்துள்ளார். 10 நாட்களுக்கு பிறகு கேரளாவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
அதைத்தொடர்ந்து லண்டன் செல்லும் படக்குழு, அங்கு மீதி படப்பிடிப்பை முடிக்கிறது. அத்துடன் தக்லைப் படத்தின் ஷூட்டிங் நிறைவடைகிறது. அதற்கு பின் போஸ்ட் புரடக்சன் பணிகள் துவங்க இருக்கின்றன. அந்த பணிகளை டைரக்டர் மணிரத்னம் மேற்கொள்ள இருக்கிறார். வரும் பொங்கல் பண்டிகைக்கு தக்லைப் படம் ரிலீஸ் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
இதற்கிடையே தக்லைப் படப்பிடிப்பு 10 நாட்கள் தள்ளிப் போக, கால்களில் காயமடைந்த மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மட்டும் காரணமல்ல. இந்த விபத்து நடக்காமல் இருந்திருந்தாலும், கமல்ஹாசன் வேறொரு முக்கிய வேலைக்கு செல்ல இருப்பதால், கண்டிப்பாக ஒரு வாரம் வரை படப்பிடிப்பு தள்ளி போயிருக்கும் என்ற தகவல் இப்போது லேட்டஸ்ட் ஆக வெளிவந்துள்ளது.
விஜய் டிவியில், கடந்த 2017ம் ஆண்டு முதல், பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் 7 ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் துவங்க இருக்கிறது. அதற்கான பிரமோ நிகழ்ச்சி ஷூட்டிங் நடத்தப்படுகிறது. இதற்கான ஷூட்டிங்கில் கமல் பங்கேற்க சென்றுவிட்டார். அதனால் 10 நாட்கள் படப்பிடிப்பு தள்ளிப் போக கமலும் ஒரு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.





