தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் பல சாதனைகளை செய்த ஆளுமை மிக்க ஒரு கலைஞராகவே மதிக்கப்படுகிறார். ஏனெனில் வெறும் நடிகராக மட்டுமே இல்லாமல் அவர் நடித்த படங்கள் மூலம் தமிழ் சினிமாவுக்கு அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு சென்ற பெருமை அவருக்கு மட்டுமே உண்டு.
இப்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் பயன்படுத்தப்படும் பல தொழில் நுட்பங்களை, அதுபற்றிய எதுவுமே தெரியாத காலகட்டத்திலேயே தனது படங்களில் கொண்டு வந்தவர் கமல்ஹாசன். எந்த மாதிரியான தொழில்நுட்பம் சினிமாவில் அறிமுகமானாலும் அதை தமிழ் சினிமாவில் கொண்டு வரும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர் கமல் என்றால் அது மிகையல்ல.
திரை ஆளுமையும் தொழில்நுட்பத்தில் வல்லமையும் கொண்ட அவர் சினிமாவிலேயே முழு கவனத்தையும் செலுத்தினால் இன்னும் இன்னும் புகழின் உச்சத்தை தொட முடியும். சினிமாவில் பல சிறந்த மாற்றங்களை கொண்டு வர முடியும். ஆனால் அவர் அரசியலில் குதித்து தமிழக மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை கொண்டுவர நினைத்தார். அது முடியாமல் போய்விட்டது.
கடந்தாண்டில் அமெரிக்காவில் 90 நாட்கள் நடந்த ஏஐ தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க கமல் சென்றுவிட்டார். அந்த ஏஐ தொழில்நுட்ப பயிற்சிகளை கற்றுக்கொண்டார். 5 மாதங்களுக்கு பிறகுதான் அமெரிக்காவில் இருந்து தமிழ்நாடு திரும்பினார். அதற்காக விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் பணியில் இருந்தும் ஒதுங்கிக் கொண்டார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இப்போது மீண்டும் அமெரிக்கா செல்கிறார். இந்த முறை அவரது சொந்த செலவில் செல்லவில்லை. தமிழக அரசு அவரது அமெரிக்கா பயணத்துக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டு அனுப்பி வைக்கிறது. இதற்காக தான் சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை கமல்ஹாசன் சந்தித்தார் என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் மிக பிரமாண்டமான பிலிம் சிட்டி ஒன்றை தமிழக அரசு அமைக்க உள்ளது. இதில் சீப் கன்சல்டிங் ஆக கமல் நியமிக்கப்படுகிறார். அமெரிக்காவில் உள்ள பிலிம் சிட்டியில் உள்ள தொழில்நுட்பங்களை இங்கே சென்னையில் அமைக்கும் பிலிம் சிட்டியில் அமைக்க ஏதுவாக, நடிகர் கமல்ஹாசனை தமிழக அரசு அமெரிக்கா அனுப்புகிறது. அவர் தொழில்நுட்பங்களை அறிந்துக்கொள்வதில் வல்லவர் என்பதால், இந்த பொறுப்பை தமிழக அரசு அவருக்கு வழங்கியதாக தெரிய வந்துள்ளது.





