ரஜினிகாந்த் தற்போது இந்திய சினிமாவின் உச்ச நடிகராக வலம் வருகிறார் என்பது பலரும் அறிந்ததே. ஆனால் அவர் தற்போது அடைந்திருக்கும் நிலை என்பது சாதாரணமாக வந்தது இல்லை. ரஜினிகாந்த் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்தவுடன், அடையார் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து நடிப்பு பயின்றார்.
அப்போது ஒரு நாள் அங்கே வந்த இயக்குனர் பாலச்சந்தர், ரஜினியின் ஸ்டைலான நடையையும் துருதுருவென இருக்கும் இயல்பையும் பார்த்துவிட்டு அவரை தனது அலுவலகத்திற்கு வரவைத்தார். அவ்வாறு ரஜினிகாந்துக்கு வந்த வாய்ப்புதான் “ஆபூர்வ ராகங்கள்”.
இத்திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லனாக நடித்தார். அதன் பின் “பைரவி” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படத்தை தொடர்ந்து ஒரே சமயத்தில் பல திரைப்படங்களில் நடித்தார் ரஜினிகாந்த்.
மிகப் பெரிய புகழும், பணமும் அவரை திண்டாட வைத்தது. 24 மணி நேரமும் ஷூட்டிங், ஷூட்டிங் என்று அலைந்துகொண்டே இருந்தார். ஆதலால் ரஜினிகாந்திற்கு மனநிலை பாதிக்கப்பட்டது. ஒரு முறை விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரி ஒருவரை தாக்கிவிட்டார். இச்சம்பவம் அவரை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நாம் போட்ட பணமெல்லாம் வீண்தானா என நினைக்கத் தொடங்கிவிட்டனர். அந்த சமயத்தில் ரஜினிகாந்த் “அன்னை ஓர் ஆலயம்” என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ரஜினிகாந்த் கேமராக்களை அடித்து உடைத்துவிட்டாராம். அந்தளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாம்.
இதனால் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலச்சந்தர் மனம் உடைந்துப்போக, ரஜினிகாந்தை மருத்துவமனையில் கொண்டு சேர்த்திருக்கிறார். அதன் பின் பல சிகிச்சைக்குப் பிறகு ரஜினிகாந்த் மீண்டு வந்தாராம்.





