நடிகர் கார்த்தியின் 25வது படம் ஜப்பான் படத்தை ஜோக்கர் பட இயக்குனர் ராஜூ முருகன் இயக்கினார். கடந்த 2023 தீபாவளிக்கு வெளிவந்த இந்த படம் மாபெரும் தோல்வியை சந்தித்தது. ஜப்பான் படத்தின் தோல்விக்கு பிறகு நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன், நேற்று முன்தினம் திரைக்கு வந்துள்ளது. நடிகர் அரவிந்த் சாமி இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
கார்த்தியின் அண்ணன் நடிகர் சூர்யாவிவ் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மெய்யழகன் படத்தை தயாரித்துள்ளது. விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இந்த படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, தேவதர்ஷினி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சிக்காக சமீபத்தில் ஐதராபாத் சென்ற கார்த்தி, அங்கு பேசிக்கொண்டு இருந்தார். அப்போது லட்டு தின்ன ஆசையா என்ற கார்த்தியின் ஒரு காமெடி காட்சி குறித்து பேச, இப்போது லட்டு சென்சிடிவ் விஷயம், அதுபற்றி பேச வேண்டாம் என்று கூறிவிட்டு அடுத்த விஷயத்தை பேச ஆரம்பித்து விட்டார்.
ஏனெனில் ஆந்திராவில் இருந்துக்கொண்டு திருப்பதி லட்டு விவகாரம் பற்றி எரியும் நிலையில் அதுபற்றி பேச வேண்டாம் என கார்த்தி நாசூக்காக சென்சிடிவ் விஷயம் என்று சொல்லி நகர்ந்த நிலையிலும், இதற்கு ஆந்திரா துணை முதல்வர் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தார். இதையடுத்து பவன் கல்யாணிடம் கார்த்தி மன்னிப்பு கேட்டது வைரலானது.
திருப்பதி லட்டு குறித்து எந்த தவறான கருத்துமே சொல்லாத நிலையில், பவன் கல்யாணிடம் கார்த்தி கேட்டது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகர் கார்த்தி முக்கிய பொறுப்பில், அதுவும் பொருளாளராக இருக்கிறார். அப்படிப்பட்ட அவர் மன்னிப்பு கேட்ட நிலையில் பவன் கல்யாணுக்கு எதிராக நடிகர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் நாசர், விஷால் போன்றவர்கள் வாய் திறக்கவில்லை.
அத்துடன், திருப்பதி லட்டு குறித்து எந்த விமர்சனமோ, கருத்தோ சொல்லாமல் அது சென்சிடிவ் விஷயம் என்பதால் அதுபற்றி பேசக்கூடாது என்று சொன்னதற்கே பவன் கல்யாண் கொதித்து எழுந்து விட்டார். எனினும் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லாத நிலையிலும், மெய்யழகன் படத்தை தனது அண்ணன் சூர்யா, அண்ணி ஜோதிகாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்ட்மென்ட் தயாரித்துள்ளது. அதன் தெலுங்கில் வெளியான மெய்யழகன் படத்துக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதாலும் இப்படி கார்த்தி மன்னிப்பு கேட்டதாகவும் தெரிய வந்துள்ளது.





