பக்கத்து வீட்டில் சண்டை சச்சரவு என்றாலோ தெருவில் சண்டை நடந்தாலோ குழாயடி சண்டை நடந்தாலோ அதை வேடிக்கை பார்ப்பது என்பது மற்றவர்களுக்கு பலத்த ஆர்வம்தான். இப்படி மற்றவர்களின் பிரச்னைகளை வேடிக்கை பார்ப்பதில் மக்களுக்கு அலாதி சுகம்தான். அதனடிப்படையில் உருவானதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சி.
100 நாட்களுக்கு மேல் ஒரு வீட்டுக்குள் போட்டியாளர்களை தங்க வைத்து, அவர்களுக்கு டாஸ்க் என்ற பெயரில் வித்யாசமான போட்டிகளை நடத்தி, அவர்களுக்குள் பகையை மூட்டி விட்டு வாரந்தோறும் ஒருவர் அதை பஞ்சாயத்து பேசுவது போல், மேலும் பிரச்னையை நெய் ஊற்றி வளர்த்து பார்வையாளர்களை ரசிக்க வைப்பது என்பது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்த வரை, மக்கள் மத்தியில் இதுபோன்ற விமர்சனங்கள் இருந்தாலும் அதை பார்க்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. ஆனால் உண்மையில் ஒவ்வொரு வீடுகளிலும் உறவுகளுக்குள் பிரச்னை ஏற்படுவதும் நாளடைவில் அது மாறி விடுவதும் சாதாரணமான நிகழ்வுகளில் ஒன்றுதான்.
இதில் பிக்பாஸ் பார்த்துதான் மனித உறவுகளில் ஏற்படும் பிரச்னைகளை, சிக்கல்களை தெரிந்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தினம் தினமும் மனிதர்கள் தங்களது சொந்த வாழ்வில் நடக்கும் பிரச்னைகளும் சிக்கல்களும் உறவு முறை பிரச்னைகளும் 1000 பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கு சமமானதாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 6ம் தேதி துவங்கி, ஜனவரி 19ம் தேதி முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் வெற்றி பெற்றார். சௌந்தர்யா 2ம் இடம் பிடித்தார். இந்த 8வது ஆண்டில் விஜய் சேதுபதி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார். இனி வரும் 9வது சீசனிலும் அவரே தொடர்வார் என உறுதி செய்யப்பட்டு விட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் இப்போது பிக்பாஸ் வீட்டில் இருந்த முக்கிய பொருட்கள் அகற்றப்பட்டு, அந்த வீட்டை இடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், டை்டடில் வின்னர் அறிவிக்கப்பட்ட பின் 100 நாட்களுக்கு மேல் போட்டியாளர்கள் வாழ்ந்த பிக்பாஸ் வீடு முற்றிலும் இடித்து அகற்றப்படுகிறது. பிறகு அடுத்த சீசனில் புதிய வடிவமைப்பில் பிக்பாஸ் வீடு அமைக்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் வழக்கமாக நடக்கிறது.





