விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் “லியோ” திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மிக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு விஜய்யை வைத்து இயக்கிய “மாஸ்டர்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய “விக்ரம்” திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடித்ததால் ரசிகர்கள் அனைவரும் “லியோ” திரைப்படத்திற்காக வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, “லியோ” திரைப்படத்தின் சிங்கிள் பாடலான “அல்டர் ஈகோ நான் ரெடி” என்ற பாடல் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இந்த பாடலின் புரொமோ ஒன்று வெளியானது.
அதில் “நான் ரெடிதான் வரவா” என்ற வரியில்தான் அப்பாடல் தொடங்கியது. இது விஜய்யின் அரசியல் நுழைவை குறிப்பிடும் வரிகள் என்று இணையத்தில் பலரும் பேசி வந்தனர். இந்த நிலையில் இப்பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இப்பாடலுக்காக பலரும் காத்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது இப்பாடல் வெளியாகியுள்ளது. இதில் பாடல் வரிகள் எல்லாம் மிகவும் அட்டகாசமாக இருக்கிறது. குறிப்பாக விஜய் ரசிகர்களை கவரும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.
அனிருத் இசையில் இப்பாடலை விஜய் தனது சொந்த குரலிலேயே பாடியுள்ளார். இந்த பாடலை விஷ்ணு எடாவன் என்பவர் எழுதியுள்ளார். அசல் கோளாறு இப்பாடலுக்கு கோரஸ் தந்துள்ளார். இப்பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“லியோ” திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலரும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.





