கானா பாடகராக இருந்த கருணாஸை நந்தா படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாலா. நடிகர் சூர்யா நடிகை லைலா மற்றும் நடிகர் ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்த நந்தா படத்தை பாலா இயக்கியிருந்தார். இந்த படத்தில் லொடுக்கு பாண்டி கேரக்டரில் நடிகர் கருணாஸ் அறிமுகமாகி காமெடி நடிப்பில் கலக்கியிருந்தார்.
குறிப்பாக தனது சிறை தண்டனை விதித்த மாஜிஸ்திரேட் வீட்டில் கருணாஸ் திருடி விட்டு தப்பிச் செல்லும் காட்சி இப்போதும் ரசிக்கப்படுகிறது. பல படங்களில் காமெடி நடிகராக நடித்து புகழ்பெற்ற கருணாஸ் பிறகு திண்டுக்கல் சாரதி அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்தார்.
இப்போது கருணாஸ் மகன் கென் கருணாஸ் நடிகராகி விட்டார். அவர் இயக்குனராக அறிமுகமாகி அவரே ஹீரோவாக நடித்த படம் யூத் பெரிய வெற்றியை பெற்றது. இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் கென் கருணாஸ் ராஜன் வகையறா என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். வெற்றிமாறனிடம் பல படங்களில் கென் கருணாஸ் உதவி இயக்குனராக பணிபுரிந்தது மட்டுமின்றி அசுரன் விடுதலை 2 படங்களிலும் நடித்திருந்தார்.
அசுரன் படத்தில் நடிகர் தனுஷ் சிவசாமி என்ற கேரக்டரில் விவசாயியாக நடித்திருந்தார். அந்த படத்தில் நடிகர் தனுஷின் மகனாக கென் கருணாஸ் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது நடிகர் கருணாஸ் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கருணாஸ் கூறியதாவது, அசுரன் படத்தில் நானும் என் மகன் கென்னும் நடிப்பதாக பேசி இயக்குனர் வெற்றிமாறன் முடிவு செய்தார். ஆனால் அந்த கதையில் கமர்சியல் வேல்யூ இருக்கிறது. எனவே நல்ல ஹீரோ நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறி நான் அந்த படத்தை நிராகரித்தேன்.
வெற்றிமாறன் ஒரு பிரபலமான இயக்குனர். அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் சினிமாவுக்கு நேர்மையாக அந்த படம் ஜெயிக்கணும் என்பதற்காக வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். அதன் பின்னர்தான் அந்த படத்தில் நடிகர் தனுஷ் நடித்தார் என்று நடிகர் கருணாஸ் கூறியிருக்கிறார். வெற்றிமாறன் இயக்கிய முதல் படம் பொல்லாதவன். இதில் ஆட்டோ டிரைவாக தனுஷின் நண்பராக காமெடி ரோலில் கருணாஸ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





