தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கவின். துவக்கத்தில் விஜய் டிவியில் கனா காணும் காலங்கள், வேலைக்காரன் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் அறிமுகமான கவின், விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களின் அதிக கவனத்தை பெற்றார்.
தொடர்ந்து கவின் டாடா என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் மனைவி இல்லாமல், தனது கைக்குழந்தையை பராமரித்து வளர்க்கும் இளம் தகப்பனாக அவரது நடிப்பு பெரிய அளவில் பாராட்டை பெற்றது. அதன்பிறகு லிப்ட் படத்திலும் கவின் நடிப்பு சிறப்பாக பேசப்பட்டது. கொரோனா தொற்றுக்காலத்தில் வெளியான இந்த படம், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பலத்த பாராட்டை பெற்றது.
லிப்ட் படத்தை தொடர்ந்து கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படமும் ஓரளவுக்கு ரசிகர்களின் மனதை கவர்ந்தது. தற்போது நடிகர் கவின் பிளடி பெக்கர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஜெயிலர் பட இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் பிலமென்ட் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் முதல்முறையாக தயாரித்துள்ள இந்த படத்தில் நாயகனாக கவின் நடித்துள்ளார்.
இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணி செய்த அவரது நண்பர் சிவபாலன் முத்துக்குமார் என்பவர் பிளடி பெக்கர் படத்தை டைரக்ட் செய்து இருக்கிறார். இந்த படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், அக்சயா ஹரிஹரன், அனார்கலி நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுஜித்ராவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.
பிளடி பெக்கர் படத்தின் அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது, இதில் பங்கேற்ற நடிகர் கவின் பேசியதாவது, ஒருவர் மீது மற்றொருவருக்கு இருந்த நம்பிக்கை தான் இந்த படம் உருவாக காரணம். நான் இதுவரை என்னென்ன விஷயங்களை கற்றுக் கொண்டேனோ, அதையெல்லாம் முடிந்த அளவுக்கு பிளடி பெக்கர் படத்தில் கொண்டுவர வேண்டும் என நினைத்தேன். எனக்கு சினிமாவில் ஒரு இடத்தை கொடுத்தவர் நெல்சன் சார். என் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இந்த படம் இருக்கும். ஏனெனில் சிவபாலன் இயக்கும் முதல் படம், நெல்சன் சார் தயாரிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
நமக்கு அமைந்த நல்ல மனிதர்களுக்காக எந்த விஷயமும் செய்யலாம் என்பதுதான் என் நம்பிக்கை. பிளடி பெக்கர் எளிமையான கதைதான். உங்களுக்கு பிடிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறோம். படத்தில் என்னுடன் நடித்த நடிகர்கள் எல்லாமே அவ்வளவு எனர்ஜியாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள் என்று பேசியிருக்கிறார். ரஜினி, ஸ்ரீதேவி நடித்த அடுத்த வாரிசு படத்தின் கதைதான் பிளடி பெக்கர் என்று தற்போது வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், கவின் நல்லா தான் கம்பி கட்டுறாரு என்று நெட்டிசன்கள், கவினை கலாய்த்து வருகின்றனர்.





