விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி போன்ற காமெடி ரியாலிடி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேபிஒய் பாலா. அவர் செய்யும் காமெடி மற்றும் ஒன்லைன் பஞ்ச் டயலாக்குகள் மூலம் பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றார்.
மேலும் அவர் செய்த சமூக சேவைகள் மூலமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். குறிப்பாக மலைகிராமங்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வாகனங்கள், மருத்துவ உதவிகள், கல்வி உதவி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி என தனது வருமானத்தில் பெரும்பகுதியை கேபிஒய் பாலா உதவி செய்யவே ஒதுக்கி விடுகிறார்.
இப்போது சென்னையில் உள்ள பல்லாவரத்தில் இலவச மருத்துவமனை ஒன்றை நடிகர் கேபிஒய் பாலா கட்டி வருகிறார். இங்கு ஏழை நோயாளிகளுக்கு ஒரு ரூபாய் கூட கட்டணம் வசூலிக்காமல் இலவசமாக மருத்துவ சிகிச்சை கிடைக்க அவர் ஏற்பாடுகளை செய்து வருகிறார். மேலும் பலவிதமான உதவிகளை அவர் செய்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே தமிழ் சினிமாவில் காமெடி ரோல்களில் பல படங்களில் கேபிஒய் பாலா நடித்திருந்தார் இப்போது கேபிஒய் பாலா கதாநாயகனாக நடித்த படம் காந்தி கண்ணாடி கடந்த 5ம் தேதி இந்த படம் வெளியானது. இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமான அவர் தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் ஷெஃரீப் இயக்கிய காந்தி கண்ணாடி படம் மக்கள் மத்தியில் நல்ல பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் இந்த படம் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை. இதுவரை மொத்தம் 2 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் காந்தி கண்ணாடி படத்தின் ஹீரோ கேபிஒய் பாலா மற்றும் காந்தி கண்ணாடி படக்குழு மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது.
காந்தி கண்ணாடி படத்தில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் காட்சிகள் மற்றும் வசனங்கள் இருப்பதாக கூறி சிவசேனா கட்சியினர் புகார் அளித்துள்ளனர். படத்தின் இயக்குனர் ஷெஃரீப் நடிகர் பாலா மற்றும் பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சர்ச்சைக்குரிய அந்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் சிவசேனா கட்சியினர் புகாரில் வலியுறுத்தியுள்ளனர். இது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





