சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் நடந்த அடிதடி விவகாரத்தில் அதிமுக ஐடி விங்கை சேர்ந்த முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கொகைன் எனப்படும் ராஜ போதை தரும் போதை வஸ்துவை வாங்கி சப்ளை செய்ததும், அதிலும் குறிப்பாக நடிகர் ஸ்ரீகாந்துக்கு அவர் கொகைன் கொடுத்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் வீட்டில் விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர். சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மருத்துவ பரிசோதனை அறிக்கையி அவர் கொகைன் பயன்படுத்தியது உறுதியானதால் போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 15 நாள் சிறைக்காவலில் அவர் புழல் மத்திய சிறையில் முதல் வகுப்பில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீகாந்திடம் போலீசார் நடத்திய விசாரணையில், தீக்கிரை என்ற படத்தில் அவர் நடித்து வருவதும் அந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் பிரசாத் என்பதும் தெரிய வந்தது. தனக்கு தர வேண்டிய ரூ. 10 லட்சம் பணத்தை தராமல் பிரதீப் என்பவர் மூலமாக ஸ்ரீகாந்துக்கு அவர் கொகைன் சப்ளை செய்ததாகவும் நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் தந்திருக்கிறார்.
மேலும் இதில் ஒரு கிராம் கொகைன் விலை 12 ஆயிரம் ரூபாய் என்றும் இதுவரை 4.72 லட்சம் ரூபாய்க்கு ஸ்ரீகாந்த் கொகைன் வாங்கியதும் அதற்கான பணத்தை டிஜிட்டல் பண பரிவர்த்தனையான ஜிபே மூலம் குறிப்பிட்ட நபருக்கு ஸ்ரீகாந்த் அனுப்பியதும் தெரிய வந்தது. இந்த முக்கியமான ஆதாரத்தை வைத்துதான் ஸ்ரீகாந்தை, போலீசார் கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொகைன் போதைப் பொருள் விவகாரத்தில் கழுகு வானவராயன் வன்மம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்த நிலையில், தனிப்படை போலீசார் நடிகர் கிருஷ்ணாவையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றிரவு முழுவதும் நுங்கம்பாக்கம் ஸ்டேஷனில் அவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை செய்துள்ளனர்.
ஆனால் தனக்கு இரைப்பையில் பாதிப்பு இருப்பதாகவும், இதயத் துடிப்பு வேகமாக இருப்பதாலும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறேன். கொகைன் போன்ற எந்த போதை தரும் பொருட்களையும் நான் பயன்படுத்துவது இல்லை என்று நடிகர் கிருஷ்ணா கூறியிருக்கிறார். மேலும் மருத்துவ பரிசோதனையில், அவர் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்றும் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் போதைப் பொருள் வாங்க, அவர் தனது செல்போனில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்திருப்பதும், கொகைன் சப்ளை செய்த கெவின் என்பவருடன் வாட்சப் காலில் பேசியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால் கிருஷ்ணா வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.





