நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் தன்னை இயக்குனராக வளர்த்துக் கொண்டவர் கார்த்திக் சுப்புராஜ். அதில் குறும்படங்களை இயக்கியே பாராட்டைப் பெற்ற கார்த்திக் சுப்புராஜ், தான் எடுத்த குறும்படத்தையே, வெள்ளி திரைக்கு கொண்டு வந்து பீட்சா படத்தை அறிமுகப்படுத்தினார். தமிழ் சினிமா வரலாற்றில் வித்தியாசமான களத்தில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ஹாரர் திரைப்படம்தான் என்றாலும், அதை சுவாரசியமாக சொல்லிய விதத்தில் நம்மை கவனம் ஈர்க்க வைத்தார் கார்த்திக் சுப்புராஜ். இதை தொடர்ந்து அவரது இரண்டாவது திரைப்படமாக ஜிகர்தண்டா உருவானது. மதுரையை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
ஒரு இயக்குனர் ரவுடிக்கு இடையேயான மோதலையும், சினிமாவை சினிமாவுக்குள் புகுத்திய விதமும் பலருக்கும் பிடித்துப் போனதால் ஜிகர்தண்டாவை ரசிகர்கள் கொண்டாடினர். படத்தில் அசால்ட் சேதுவாகவே வாழ்ந்த பாபி சிம்ஹா, அதற்காக தேசிய விருதைப் பெற்றார். இந்த நிலையில் ஜிகர்தண்டாவை தொடர்ந்து, இறைவி, மெர்க்குரி உள்ளிட்ட படங்களை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார்.
பிறகு தனது ஆஸ்தான நடிகரான ரஜினிகாந்த் உடன் இணைந்த கார்த்திக் சுப்புராஜ் பேட்ட திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். தொடர்ந்து தனுஷை வைத்து ஜகமே தந்திரம், விக்ரமை வைத்து மகான் திரைப்படங்களை இயக்கிய அவர், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை உருவாக்கினார். இதில் ராகவாலாரன்ஸும் எஸ்டி சூர்யாவும் நடித்தனர். ஏற்கனவே முந்தைய பாகத்தில் ராகவா லாரன்ஸ் தான் நடிப்பதாக இருக்க கடைசி நேரத்தில் கால் சீட் பிரச்சனை ஏற்பட்டதால் பாபி சிம்ஹா படத்திற்குள் வந்தார்.
இந்நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் உருவாகி கடந்த தீபாவளி அன்று வெளியானது. படத்தின் முதல் பாதி அட்டகாசமாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி மலைவாழ் மக்களின் பிரச்சனைகளை பேசும் விதமாக எடுக்கப்பட்டிருப்பதாகவும் பாராட்டுக்கள் குவிந்தன. விமர்சன ரீதியாக படம் வரவேற்பு பெற்றதால், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு ரசிகர்கள் படையெடுக்க ஆரம்பித்தனர்.
அதே சமயம், தீபாவளியன்று வெளியான கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் சரியாக போகாததாலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் அந்த திரைப்படம் இதுவரை ஒட்டுமொத்தமாக 60 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த திரைப்படம் 40 கோடி ரூபாய் வசூல் ஈட்டி இருக்கிறதாம். இதனால் உற்சாகத்தில் இருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தனது அடுத்த படத்திற்கான கதை எழுதும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.





