ஆரம்பத்தில் இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்தவர் லிவிங்ஸ்டன். பிறகு பூந்தோட்ட காவல்காரன் படத்தில் அவரை நடிகராக மாற்றியவர் கேப்டன் விஜயகாந்த் தான். அந்த படத்தில் ஒரு முக்கியமான ரோலில் லிவிங்ஸ்டனை விஜயகாந்த் நடிக்க செய்தார்.
தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் படத்திலும் லிவிங்ஸ்டன் நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களில் லிவிங்ஸ்டன் நடித்த நிலையில் சுந்தர புருஷன் என்ற படத்தில் கதாநாயகனாக அவர் நடித்தார். அதில் ரம்பா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு சொல்லாமலே படமும் லிவிங்ஸ்டனுக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் லிவிங்ஸ்டன் கூறியதாவது, சுந்தர புருஷன் படத்தில் நான் ஹீரோ என்றவுடன் அதை கேட்டு பலரும் சிரித்தார்கள். நீ வில்லனா நடிச்சே பெரிய அளவில் பேமஸ் ஆகலே. நீ ஆனந்தராஜ் அளவுக்கு கூட இன்னும் பேர் வாங்கலே. அதுக்குள்ள ஹீரோவா நடிக்கப் போறியா? அதுவும் படத்துக்கு பேரு சுந்தர புருஷனா?
சுந்தர புருஷன்னா என்ன அர்த்தம் தெரியுமா? அழகான புருஷன்னு அர்த்தம். நீ அப்படி அழகானவனா இருக்கியா? நீ 50 படத்துக்கு மேல நடிச்சுட்டே? இப்போ ஹீரோவா நடிக்கறேன்னு பைலை வெச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கறே வெட்கமா இல்லையா உனக்கு என்று எல்லாம் கேலியாக பேச ஆரம்பித்து விட்டார்கள்.
அப்போது ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம், அந்த கதையை அப்படியே என்கிட்ட கொடுத்துடு. கதை நல்லா இருக்குது. முரளியை வெச்சு நாங்க பண்ணிக்கறோம். 4 லட்சம் ரூபாய் கொடுக்கிறோம். இப்பவே கொடுத்து விடுகிறோம் என்று என்னிடம் விலை பேசினார்கள். இல்லை சார். இது எனக்காக எழுதிய கதை இது. கஷ்டப்பட்டு எழுதியிருக்கிறேன் என்று மறுத்து விட்டேன்.
இப்போது மாதிரி அப்போது எனக்கு பண பிரச்னைகள் இருந்திருந்தால் அந்த 4 லட்சம் ரூபாயை வாங்கியிருந்தாலும் வாங்கியிருப்பேன். அப்போது பணம் குறித்த அக்கறை இல்லை. அதோட மதிப்பும் எனக்கு தெரியவில்லை என்பதுதான் உண்மை என்று நடிகர் லிவிங்ஸ்டன் அதில் கூறியிருக்கிறார்.





