சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் படம், எதிர்பார்த்ததை விட பலமடங்கு வெற்றியை தந்துவிட்டது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் மாஸ் வெற்றியை தொடர்ந்துதான், பீஸ்ட் என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. ஆனால், விஜய் ரசிகர்களே தலைவலி மாத்திரையை தேடும் அளவுக்கு அந்த படத்தில், ஏகப்பட்ட சொதப்பல்களை செய்து, வேற லெவலில் திட்டுகளை வாங்கியவர் நெல்சன்.
அதனால், ஜெயிலர் படத்தில் ரஜினியை என்ன செய்யப் போகிறாரோ என, ரஜினி ரசிகர்கள்,ஜெயிலர் பட ரிலீஸ் அன்று, த்ரில்லர் படம் பார்க்கும் திகிலுடன் காத்திருந்தனர். ஆனால், ரஜினியின் மாஸான ஸ்டைல் நடிப்பும், அனிரூத் இசையும், தமன்னாவின் காவாலா பாட்டும், குறிப்பாக வில்லன் விநாயகனின் மிரட்டலான நடிப்பும் படத்தை வேற லெவலில் பாராட்டச் செய்துவிட்டார் நெல்சன்.
இந்நிலையில், தசெ ஞானவேல் இயக்கத்தில், ரஜினி 170 என்ற படத்தில், அடுத்து ரஜினி நடிக்கிறார். இந்த படத்தில் பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். சிறிய வேடம் என்றாலும், அவரது கேரக்டர் வெயிட்டாக இருக்கும் என கூறப்படுகிறது. படத்தில் அமிதாப் பச்சன் வரும் காட்சிகள் பவர் புல்லாக இருக்கும்படி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
தசெ ஞானவேல் இயக்கும் இந்த படத்தின் கதை நாகர்கோவிலில் நடப்பதாகவும், அதில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிப்பதாகவும் முதலில் பேசப்பட்டது. ஆனால், இப்போது படத்தின் கதையே வேறு மாதிரி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய கல்வி திட்டங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் கேரக்டரில் ரஜினி நடிப்பதாக கூறப்படுகிறது. அதாவது அதிகரித்து வரும் கார்பரேட் கோச்சிங் சென்டர்கள், அதில் படிக்கும் மாணவ, மாணவியர் எதிர்காலம், அவர்கள் தரும் இலவசங்கள், கடனுதவிகள் குறித்த தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தும் வகையில் இந்த படத்தை தசெ ஞானவேல் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் வந்த ஜெயிலர் படத்தில், ரஜினி ஜெயிலர் என்ற போலீஸ் கெட்டப்பில்தான் நடித்திருந்தார். அதற்கு முன், ஏஆர் முருகதாஸ் இயக்கிய தர்பார் படத்திலும் ரஜினி போலீஸ் கமிஷனராகவே நடித்திருந்தார். இப்படி தொடர்ந்து போலீஸ் கெட்டப்பில், ரஜினியை காட்ட வேண்டாம் என, இப்படி கேரக்டரை மாற்றி இருக்கலாம் என, கோலிவுட்டில் பேசப்படுகிறது. அதே வேளையில், ஜெயிலர் படத்தை காட்டிலும் சிறந்த படமாக தர வேண்டி இருப்பதால், பல புதிய விஷயங்களை இதில் இயக்குநர் சேர்க்கவும் அதிக வாய்ப்புள்ளது.
ஏற்கனவே, தமிழகத்தில் அரசியலை, அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சிக்கும் வகையில், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ரஜினி. இப்போது தனது 170வது படத்தில், கல்வித்திட்டங்களில் .உள்ள குளறுபடிகளை தட்டிக்கேட்பது நல்ல விஷயம்தான். ஆனால், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். மனைவியே பள்ளி நடத்தும் போது, இவர் கல்வித்திட்டத்தை எதிர்த்து வசனம் பேசினால், அதை வைத்தே ட்ரோல் செய்வார்களே என ரசிகர்கள் பலரும் புலம்புகின்றனர்.





