தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் மாதவன். ராக்கெட்ரி நம்பி விளைவு படம் மூலம் இயக்குனராகவும் வெற்றி பெற்றிருக்கிறார். அன்பே சிவம் மன்மதன் அம்பு ரன் ஆயுத எழுத்து யாவரும் நலம் என தமிழில் பல படங்களில் மாதவன் நடித்திருக்கிறார். மேலும் விளம்பர படங்களில் மாதவன் நிறைய நடித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய நடிகர் மாதவன் கூறியதாவது, குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது என்பது அவர்களை விவரங்கள் தெரியாமல் வளர்ப்பது அல்ல. மாறாக அவர்களுக்கு உலகத்தின் எதார்த்தத்தை முன்கூட்டியே புரிய வைப்பதே சிறந்தது. என் மகன் வேதாந்த்க்கு மிகச்சிறு வயதில் இருந்தே ஒரு முதிர்ந்த நபரை போலவே மதிப்பளித்து வளர்த்தேன்.
குறிப்பாக பெரும்பாலான பெற்றோர்கள் பேசத் தயங்கும் பாலியல் ரீதியான தொடுதல், பாலியல் பாதுகாப்பு மற்றும் கருத்தடை போன்ற விஷயங்களை பற்றி வேதாந்த் டீன் ஏஜ் பருவத்தை எட்டுவதற்கு முன்பே சொல்லி வளர்த்தேன். அதாவது அவரது நான்கு வயதில் இருந்தே நான் அனைத்தையும் வெளிப்படையாக பேசி வருகிறேன். இது எனக்கும் அவருக்குமான நம்பிக்கையை அதிகரித்தது.
இந்த வெளிப்படையான அணுகுமுறை வேதாந்துக்கு என் மீது பெரும் மரியாதையை ஏற்படுத்தியது. ஒரு பொறுப்புள்ள இளைஞராக அவரை மாற்றவும் அது உதவியுள்ளது. சினிமா நட்சத்திரத்தின் வாரிசாக இருப்பதால் ஏற்படும் தேவையற்ற செல்வாக்குகள், புகழின் இருண்ட பக்கங்கள் மற்றும் பெண்களை எவ்வாறு மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பது போன்ற வாழ்வியல் பாடங்களையும் அவருக்கு முன்கூட்டியே கற்றுக் கொடுத்தேன்.
இதன் மூலம் வெளியுலக அழுத்தங்களை வேதாந்த் எளிதாக கையாள முடியும் என்றும் கருதினேன். ஒரு தேசிய விருது பெற்ற நடிகர் என்ற பிம்பம் வேதாந்த்தை ஒருபோதும் பாதித்ததில்லை. நான் நடித்த படங்களில் வேதாந்துக்கு பிடித்த படம் 2009ம் ஆண்டில் வெளியான யாவரும் நலம் படம் மட்டும்தான்.
திரையுலகில் இருக்கும் பல தந்தைகள் தங்கள் பிள்ளைகள் தங்களின் திரை பயணத்தை தொடர வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் நான் இதில் முற்றிலும் மாறுபடுகிறேன். எனது மகன் என் நிழலில் வளராமல் தனக்கென ஒரு தனி பாதை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. அதனால் தான் தற்போது சர்வதேச அளவில் நீச்சல் போட்டிகளில் பதக்கங்களை வென்று வரும் வேதாந்த் நான் அவருக்கு கொடுத்த அந்த சுதந்திரத்தையும் முதிர்ச்சியையும் மிகச் சரியாக பயன்படுத்தி வருகிறார் என்று நடிகர் மாதவன் கூறியிருக்கிறார்.





