அஜித்குமார் தற்போது கார்பந்தயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதில் துபாயில் நடைபெற்ற போட்டியில் அவரது அஜித்குமார் ரேசிங் அணி பரிசு வென்றது. தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் அவரது அணி கலந்து கொண்டது. அண்மையில் அவரது அஜித் குமார் ரேசிங் அணியில், எஃப் ஒன் பந்தய கார் ரேஸர் நரேன் கார்த்திகேயன் இணைந்தார்.
இவர்கள் இருவரும் டிசம்பர் மாதம் நடைபெறும் ஆசியன் லீஸ் மான்ஸ் தொடரில் கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, திரை துறையிலும் தீவிர கவனத்தை செலுத்த முடிவெடுத்திருக்கிறார் அஜித் குமார். ஏற்கனவே அளித்திருந்த பேட்டியில் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு, சினிமாவில் மட்டுமே தனது கவனம் இருக்கும் என்று அவர் கூறியிருந்தார்.
இதில் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதம் இது வெளியாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது உறுதியாகிவிட்டது. இதற்கு முன்னதாக அவர் அஜித்குமாரை வைத்து குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல் முழுக்க முழுக்க கமர்சியல் கதை களத்தில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இதில் ரெட்ரோ பாடல்களையும் அதிகம் பயன்படுத்தியிருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். படத்தில் குறைகள் நிறைய இருந்தாலும், என்டர்டைன்மென்ட் படமாக இது அமைந்ததால், குட் பேட் அக்லி 300 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் குவித்தது.
இப்படியான சூழலில், குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது என்றும், அடுத்த படம் அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில் ஒரு என்டர்டைன்மென்ட் ஆக இருக்கும் எனவும் ஆதிக் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அந்த திரைப்படத்திலிருந்து அடுத்த அடுத்த தகவல் வெளிவர ஆரம்பித்துள்ளன. இதில் கதாநாயகியாக தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.
இதுபோக சுவாசிகா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மிக முக்கியமாக மோகன்லாலை இந்த திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. தென் தமிழகத்தில் துறைமுகத்தை மையமாக வைத்து இந்த திரைப்படத்தின் கதை எடுக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி என்றால் தூத்துக்குடி ராமேஸ்வரம் அல்லது கன்னியாகுமரியை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படலாம் என்று திரைத்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.





