ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் உற்றுப் பார்க்கும் நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கிறார் மணிகண்டன். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் வந்து போன அவர் குறும்படங்களிலும் நடித்து வந்தார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.
இப்படி தனக்கான பாதையை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கிய மணிகண்டன் இப்போது ஆலமரமாக விரிந்து தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலமாக உருவெடுத்து இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் அவரது கடும் முயற்சி மட்டும்தான். எடுத்த உடனேயே ஹீரோ என்று அவதாரத்தை ஏற்றுக்கொள்ளாமல் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொண்டார் மணிகண்டன்.
விக்ரம் வேதா படத்தில் போலீஸ் கெட்டப், காலா திரைப்படத்தில் ரஜினியின் மகன், ஜெய் பீமில் ராசாக்கண்ணு கதாபாத்திரம் என அவர் ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு ரோலும் திரையை விட்டு வெளிவந்த பிறகும் பேசும் வகையில் அமைந்திருந்தது. இதில் முக்கியமாக விக்ரம் வேதா திரைப்படத்தில் வசனகர்த்தாவாகவும் பணி புரிந்தார் மணிகண்டன்.
தற்போது முழு நேர நடிகராக அவர் மாறி இருக்கிறார். குட் நைட் திரைப்படத்தின் மூலம் தான் அவரது இந்த பயணம் தொடங்கியது. குறட்டை என்னும் சின்ன கான்செப்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெற்றி மேல் வெற்றி குவித்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அதிக வசூல் ஈட்டியதால் மணிகண்டன் பாராட்டைப் பெற்றார்.
பிறகு 2கே கிட்ஸ்களை மையப்படுத்தி அவர் நடித்த லவ்வர் திரைப்படமும், ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது. இப்படி முதல் இரண்டு திரைப்படமும் மணிகண்டனுக்கு வெற்றியைக் கொடுக்க அவருக்கு, மூன்றாவது சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்தது குடும்பஸ்தன். சொல்லப் போனால் இந்த ஆண்டில் வெளியான முதல் வெற்றி திரைப்படம் அதுதான் என்று அடித்து சொல்லலாம்.
இப்படியான சூழலில் மணிகண்டன் அடுத்ததாக ஒரு படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை விக்ரம் வேதா திரைப்படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி உறுதி செய்து இருக்கிறார்கள். இது குறித்து பேசிய காயத்ரி, மணிகண்டன் கூறிய கதை மிகவும் பயங்கரமாக இருந்தது. அதனை நாங்கள் தான் தயாரிக்க இருக்கிறோம். இதில் நடிகர் வசனகர்த்தா இயக்குனர் என மூன்று பரிணாமங்களில் மணிகண்டனை பார்க்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.





