கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித்குமார், இயக்குனர் ஹெச் வினோத்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் துணிவு திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்திற்குப் பிறகு அவர் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாகத்தான் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் படத்தில் இருந்து விலகினார் விக்னேஷ் சிவன். இதை எடுத்து கிரைம் திரில்லர் படங்களை எடுப்பதில் கைதேர்ந்த மகிழ் திருமேனி, அஜித் படத்தை எடுப்பதாக அறிவிக்கப்பட்டார்.
அஜித்தின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதியன்று இதன் அறிவிப்பு வெளியானது. அன்றைய தினமே படத்தின் டைட்டிலுக்கு விடாமுயற்சி என்றும் பெயரிடப்பட்டது. அதன் எழுத்து வடிவத்தில், லொகேஷன் குறியீடு இருந்ததை கவனித்த ரசிகர்கள், படத்தில் நிச்சயம் முக்கியமான விஷயம் பேசப்படும் என்று கமெண்ட் அடித்தனர்.
ஆனால் அறிவிப்பு வெளியானதோடு சரி அதன் பிறகு எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடாமல் இருந்தது. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகியும் படம் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகாததால், விடாமுயற்சி கைவிடப்பட்டதாக சிலர் கூறினர். ஆனால் இதனை தயாரிப்பு நிறுவனமான லைக்கா திட்டமிட்டமாக மறுத்தது.
கதாநாயகன் அஜித் குமார் பைக் டூர் இருப்பதாலேயே இந்த தாமதம் என்று சிலர் பேசி வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் அஜர்பைஜானில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் அஜித்துடன் திரிஷா, சஞ்சய்தத், அர்ஜுன், அருண் விஜய், ஆரவ், ரெஜினா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் முக்கியமான கார் சேஸிங் காட்சி அங்கு படமாக்கப்பட்டதாம்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக ஒரு சின்ன இடைவேளையை விட படக்குழு முடிவு செய்ததாம். ஆனால் இதனை வேண்டாம் என்று கூறி இருக்கும் அஜித் குமார், தயாரிப்பாளரின் செலவு கருத்தில் கொண்டும், பிரீ ப்ரொடக்ஷன் பணிகள் நல்ல முறையில் செல்லவும் தொடர்ந்து வேலைகளை நடத்த படக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளாராம். இதன் காரணமாக அடுத்த கட்ட பணிகளில் விடாமுயற்சி படக்குழு கவனம் செலுத்தி வருகிறதாம். அஜர்பைஜானை தொடர்ந்து துபாயில் நடைபெறும் படப்பிடிப்பில், அஜித், திரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.





