தமிழ் சினிமாவில் ரசிகர்களின் அதீத கவனம் பெற்ற வளரும் கலைஞராக ஒரு முக்கிய நடிகராக மணிகண்டன் இருக்கிறார். துவக்கத்தில் டப்பிங் ரைட்டர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஸ்கிரிப்ட் ரைட்டர் உதவி இயக்குனர் மமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என தமிழ் சினிமாவில் இருந்தவர் இப்போது முக்கியமான இடத்தில் நல்ல நடிகராக தன்னை அடையாளப்படுத்தி இருக்கிறார்.
காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்தவர், அடுத்து ஜெய்பீம் படத்தில் ராஜாக்கண்ணு கேரக்டரில் நடித்து ரசிகர்களை பதைபதைக்க வைத்தார். பிறகு குட்நைட் லவ்வர் படங்களின் பலத்த வெற்றிக்கு பிறகு இப்போது அவரது நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் படம் சக்கைப் போடு போட்டுவிட்டது.
மோட்டார் மோகன் கேரக்டரில் குட்நைட் படத்திலும், நெருக்கமாக காதலித்து பிறகு பிரிந்து விடும் காதலிக்காக வருந்தி அழும் ஒரு இளம் காதலனாக லவ்வர் படத்திலும், வேலையை இழந்து வருமானமின்றி குடும்பத்தை சமாளிக்க முடியாமல் அல்லல்படும் குடும்ப பொறுப்புள்ள ஒரு கணவனாக குடும்பஸ்தன் படத்திலும் மணிகண்டன் வேற லெவலில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
குட்நைட் லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் என அடுத்தடுத்து வெளியான அவரது 3 படங்களுமே 50 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி அவருக்கு பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்த நிலையில் அதுகுறித்து நடிகர் மணிகண்டன் உருக்கமான ஒரு பதிவை செய்திருக்கிறார்.
அதில் நடிகர் மணிகண்டன் கூறியிருப்பதாவது, சிறிய வெற்றிகளுக்கு பெரிய இதயங்கள் தேவை. மக்களிடமிருந்து நான் பெரும் அன்பை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. ஒரு சிறிய திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடியதை கொண்டாடுவது மிகப்பெரிய வெற்றி மற்றும் சாதனையாகும். அதை சாத்தியமாக்கிய ஒவ்வொருவருக்கும் மிக்க நன்றி. ஒருமுறை இரண்டு முறை அல்ல மூன்று முறை. என் படங்களின் வெற்றிக்கு மக்களின் அன்புதான் காரணம்.
என் மீது நம்பிக்கை வைத்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் இந்த படங்கள் வெற்றி பெற உழைத்த அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அனைத்து தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் படக்குழு உறுப்பினர்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். என்னையும் என் நடிப்பையும் ஏற்றுக் கொண்ட அனைத்து மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்று அந்த பதிவில் நடிகர் மணிகண்டன் உருக்கமாக கூறியிருக்கிறார்.





