மாநாடு வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களை கொடுத்த சிலம்பரசனுக்கு, பத்து தல திரைப்படம் அந்த அளவு விமர்சனத்தை தரவில்லை. இந்தத் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. அதன் பிறகு இப்போது வரை சிம்பு திரைப்படங்கள் எதையும் திரையரங்குகளில் காண முடிவதில்லை.
தற்போது அவர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில், சிம்புவுக்கு முக்கிய ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது. திரிஷா அபிராமி நாசர் அசோக் செல்வன் கௌதம் கார்த்திக் உள்ளிட்டோரும் இதில் இருக்கிறார்கள்.
வரும் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. சிம்புவின் 48வது திரைப்படமாக தக் லைப் திரைப்படம் உருவாகி இருக்க, அவரின் 49 வது திரைப்படத்தை எடுக்கிறார் ராம்குமார் பாலகிருஷ்ணன். பார்க்கிங் திரைப்படத்தை எடுத்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் இவர்.
இதே போல் சிலம்பரசனின் ஐம்பதாவது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை எடுத்த அவருக்கு இரண்டாவது திரைப்படமாக இது அமைகிறது. இதனை முதலில் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகத்தான் இருந்தது.
ஆனால் அதீத பட்ஜெட் காரணமாக தயாரிப்பு நிறுவனம் பின் வாங்க, பிறகு சிம்புவே இதனை தயாரிப்பதாக அறிவித்தார். ஏஜிஎஸ் நிறுவனமும் இதில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் 51வது திரைப்படத்தை, டிராகன் படத்தை எடுத்த அஸ்வந்த் மாரிமுத்து இயக்குகிறார். இதையும் ஏஜிஎஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இப்படியான சூழலில் தற்போது சிம்புவின் 49வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இதில் இன்ஜினியரிங் படிக்கும் கல்லூரி மாணவராகவும் அதே சமயம் கேங்ஸ்டர் பாத்திரத்திலும் வருகிறார் சிம்பு. படத்தில் சந்தானம் இணைந்திருப்பது தான் பலரது ஆர்வத்தையும் தூண்டி இருக்கிறது. கிட்டத்தட்ட பத்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பெரிய ஹீரோ படத்தில் சப்போர்ட்டிங் ஆக்டராக அவர் வருகிறார். படத்தில் சாய் பல்லவியும் கதாநாயகியாக நடிப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.





