நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சிக்கு தலைவரான நிலையில், இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் அந்த படத்திலும் நடிப்பாரா, மாட்டாரா என்பதில் பலத்த சந்தேகம் நீடிக்கிறது. ஏனெனில் ஜூன், ஆகஸ்ட், அக்டோபர் என 3 முறை தள்ளிப் போடப்பட்ட படப்பிடிப்பு, வரும் நவம்பரில் துவங்கும் என இப்போது தெரிய வந்துள்ளது.
ஆனால் இதுவும் உறுதியான அறிவிப்பா என்றால், அதுவும் மாற்றத்துக்கு உட்பட்டதுதான் என்று கூறப்படுகிறது. ஏனெனில் விஜய்க்கு, சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள், மிகப்பெரிய அதிர்ச்சியை தந்திருக்கிறது. ஏனெனில், போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
வருகிற 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய், எதிர்த்து அரசியல் செய்யப் போவது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தான். இதில் நாம் தமிழர் கட்சியுடன் விஜய் கட்சி இணையுமா அல்லது இணையாதா என்பது தேர்தல் நெருங்கும் சமயத்தில்தான் உறுதியாகும்.
ஆனால் விஜய் கட்சியுடன் இணைவது நாம் தமிழர் கட்சிக்கு சாத்தியமற்ற விஷயமாக முதலில் பார்க்கப்பட்ட நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்ணனும், தம்பியும் ஒன்று சேருவது என்ன தப்பு என்று கேள்வி எழுப்பியதுடன் வெயிட் பண்ணுங்கள் என்றும் கூறியிருக்கிறார்.
அதனால், விஜய் சீமான் இருவரும் இணைந்து 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் கட்சியில் நிர்வாகிகள், உறுப்பினர் சேர்க்கையில் அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு அவர் நேரில் சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசியும் இருக்கிறார்.
அவர் கட்சி நிர்வாகிகளிடம் பேசுகையில், விஜய் கட்சியில் சேர்ந்துவிட்டால் பேரும் புகழும் கிடைக்கும், பதவிகள் கிடைக்கும் என்று ஆசைப்படுபவர்களுக்கு இந்த கட்சியில் இடம் கிடையாது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், கட்சிக்காக உண்மையாக கடுமையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே கட்சியில் இணையுங்கள். அப்படி கட்சியின் வெற்றிக்கு பாடுபடுபவர்களுக்கு உரிய நேரத்தில் அதற்கான பலன்களும், பதவிகளும் தேடிவரும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்.





