தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகராக இருப்பவர் மணிகண்டன். தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்து வருகிறார். இந்தியா பாகிஸ்தான் நக்கீரன் காதலும் கடந்து போகும் நெற்றிக்கண் ஏலே உள்ளிட்ட பல படங்களில் நடித்த மணிகண்டனுக்கு காலா படம் நல்ல அடையாளத்தை கொடுத்தது. இதில் ரஜினிக்கு மகனாக மணிகண்டன் நடித்திருந்தார்.
தொடர்ந்து ஜெய்பீம் குட் நைட் லவ்வர் சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன் படம் என நடிகர் மணிகண்டனுக்கு தொடர்ந்து அவரது படங்கள் வெற்றியை கொடுத்து கொண்டிருக்கின்றன. நல்ல நல்ல கதைகளை, ஸ்கிரிப்ட்டுகளை, கேரக்டரை தேர்வு செய்து மணிகண்டன் நடிப்பதாக பலரும் மனதார அவரை பாராட்டி வருகின்றனர்.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசுகையில், நான் இயக்க விரும்பும் நடிகர்களில் மணிகண்டனும் ஒருவர் என்று குறிப்பிட்டுச் சொல்லி இருந்தார். அந்த அளவுக்கு இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை மட்டுமின்றி இயக்குனர்களையும் மணிகண்டன் கவர்ந்து வருகிறார். அதிலும் குடும்பஸ்தன் படத்தில் அவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது.
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே மணிகண்டன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்தவர். பல படங்களுக்கு டப்பிங் ரைட்டராக இருந்திருக்கிறார். ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் உள்ள அவர் சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகவும் பணிசெய்தவர். ஆர்ஜேவாகவும் இருந்த மணிகண்டன் மிமிக்ரி கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதனால் நடிப்பை போலவே சினிமா இயக்குவதிலும் நடிகர் மணிகண்டனுக்கு அதிக ஆர்வம் உள்ளது. ஏற்கனவே அவர் நடிகர் டெல்லி கணேஷ் பிரதான கேரக்டரில் நடித்த நரை எழுதும் சுயசரிதை என்ற படத்தை டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தில் மணிகண்டனும் நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2016ம் ஆண்டில் வெளியானது. பல விருதுகளை வென்ற இந்த படத்துக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பும் கிடைத்தது.
இந்நிலையில் நடிகர் மணிகண்டன் மீண்டும் ஒரு படத்தை இயக்க தயாராகி விட்டதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகிறது. அவரே ஒரு கதையை ஸ்கிரிப்ட் எழுதி தயாராக வைத்திருப்பதாகவும் மணிகண்டனே அந்த படத்தில் ஹீரோவாக நடித்து அவரே டைரக்ட் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





