சில படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த பிறகுதான், அந்த படத்தில் அந்த முக்கிய கேரக்டரில் நடிக்க வேண்டிய நடிகர் அவரல்ல, அவர் நடிக்க மறுத்த காரணத்தால் வேறொரு நடிகர் நடித்திருக்கிறார் என்ற தகவலே வெளிச்சத்துக்கு வருகிறது.
உதாரணமாக காதலுக்கு மரியாதை படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க டைரக்டர் பாசில் அணுகியது நடிகர் ஸ்ரீகாந்தை தான். ஆனால் அவர் கால்ஷீட் இல்லை என மறுத்து விட்டதால், பிறகு அந்த படத்தில் விஜய் நடித்தார். காதலுக்கு மரியாதை விஜயின் சினிமா பயணத்தில் மாபெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
அதே போல் சூர்யா நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற கஜினி படத்தில் முதலில் நடிக்க கமிட் ஆனது அஜீத்குமார்தான். சில வாரங்கள் வரை அந்த படத்தில் நடித்துவிட்டு, மொட்டையடிக்க வேண்டும், முகத்தில் தழும்பு போட வேண்டும் என்று இயக்குனர் ஏஆர் முருகதாஸ் சொன்னவுடன் படத்தில் நடிக்க மறுத்துவிட்டு வெளியேறிவர்தான் அஜீத்குமார். பிறகு அந்த படம் சூர்யாவுக்கு பெரிய திருப்பத்தை தந்தது.
இப்படி பல வெற்றிப் படங்களின் பின்னணியை அலசிப் பார்த்தால் அதில் முதலில் நடிக்க இருந்த நடிகர், நடிகை வேறாகவும், நடித்தவர்கள் வேறாகவும் தான் இருந்திருப்பர். நாட்டாமை படத்தில் நடிக்க பார்த்திபனையும், முத்து படத்தில் மீனா கேரக்டரில் நடிக்க சுகன்யாவையும்தான் கேஎஸ் ரவிக்குமார் முதலில் பேசியிருக்கிறார்.
அதே போல் நடிகர் விஜய் நடிப்பில் இப்போது வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கும் தி கோட் படத்தில், மைக் மோகன் வில்லனாக நடித்திருந்தார். அவர் நடிப்பதற்கு படத்தில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லை என்றாலும், அவர்தான் வில்லன் என ரசிகர்களிடம் பிக்ஸ் ஆகி விட்டார். ஆனால் இந்த கேரக்டரில் முதலில் நடிக்க வேண்டும் என இயக்குனர் வெங்கட்பிரப 2 பேரை தான் மனதில் நினைத்துள்ளார்.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் கூறிய இயக்குனர் வெங்கட்பிரபு, மோகன் நடித்த மேனன் கேரக்டரில் நடிகர் அரவிந்த் சாமி அல்லது மாதவன் ஆகிய 2 பேரில் ஒருவரை நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால் ஜெயராமுக்கு மூத்தவராக மேனன் கேரக்டர் இருக்க வேண்டும் என்பதால் அரவிந்த் சாமி, மாதவன் இருவருமே ஜெயராமை விட வயதில் இளமையாக தெரிவார்கள் என்பதால், ஒரு கட்டத்தில் அந்த மேனன் கேரக்டரில் மோகனை நடிக்க வைத்தேன். மேலும் மாதவன், அரவிந்த் சாமி நடித்திருந்தால் அவர்களுக்காக இன்னும் பல காட்சிகளை கூடுதலாக்கி இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.





