தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனராக இருப்பவர் செல்வராகவன். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை போன்ற வெற்றிப் படங்களை தந்தவர். சமீபமாக நடிகராகவும் மாறிவிட்டார். பீஸ்ட், மார்க் ஆண்டனி, பகாசுரன், பர்ஹானா, ராயன் உள்ளிட்ட படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
அவ்வப்போது தனது வலைதள பக்கத்தில் நல்ல பதிவுகளை செய்யும் அவர், இந்த முறை தமிழ் மொழி குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். சினிமா சார்ந்த விஷயங்கள் மட்டுமின்றி தனது வாழ்வியல் அனுபவங்களை, சமூக கருத்துள்ள சிந்தனைகளை இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது பதிவிடுவது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வீடியோவில் இயக்குனர் செல்வராகவன் கூறியிருப்பதாவது, தமிழக மக்களை நான் கெஞ்சி கேட்கிறேன் தமிழ் இனி மெல்ல சாகும் என்று பாரதியார் சொன்னார். அது எந்தளவுக்கு உண்மை என்றால் தமிழ் இப்போது ஐசியு வென்டிலேட்டரில் இருக்கிறது. தமிழில் பேசுவதை அவமானமாக அருவருப்பாக நினைக்கிறாங்க. எனக்கு இங்கிலிஷ்ல பேசறதோட அவசியம் புரியுது. ஸ்கூல்ல, காலேஜ்ல இங்கிலீஷ்ல பேச முடியாம அவமானப்பட்டு எவ்வளவு தடவை அழுதிருக்கேன். கூனிக்குறுகி இருக்கேன்.
அதுக்கு பிறகுதான் ஒரு வெறி வந்தது. என்ன இங்கிலீஸ் என இங்கிலீஷ் புத்தகங்கள் எல்லாம் படிக்க ஆரம்பித்தேன். அர்த்தம் தெரியாததற்கு பக்கத்தில் டிக்ஷனரி வச்சுக்கிட்டு, இதுக்கு இதுதான் அர்த்தம் என தெரிஞ்சுகிட்டேன். இப்படி படிக்கறதுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் படிக்க படிக்க கொஞ்சம் சரளமாக பேச ஆரம்பிச்சேன்.
அப்புறம் அப்படியே ஸ்டேஜில் பேச ஆரம்பிச்சு, அதுக்கப்புறம் சினிமாவுக்கு வந்த பின்னாடி தான் ஓரளவுக்கு இங்கிலீஸ்ல நல்லா பேச ஆரம்பித்தேன். ஆனால் நான் எங்கே போனாலும் தமிழில் தான் பேசுவேன். நீங்களும் எங்கே போனாலும் தமிழிலேயே பேசுங்க. தலை நிமிர்ந்து பேசுங்க. அப்படி பேசும்போது மற்றவர்கள் உங்களை அவமானமா பார்த்தால் அதை கண்டுகொள்ளாதீர்கள்.
தமிழில் பேசுவதை இழிவாகப் பார்த்தால் அப்படிப்பட்ட உறவே தேவையில்லை தூக்கி எறிந்து விடுங்கள். தமிழில் பேசறதை விரும்புகிற தமிழ் பொண்ணே போதும். உலகத்துல எந்த நாட்டுக்கு வேணும்னாலும் போய் பாருங்க. அவங்களோட தாய் மொழியில்தான் அவங்க பேசுவாங்க. இங்கிலீஷ்ல சப்- டைட்டில்தான் போடுவாங்க. வெளிநாட்டுக்காரங்க தமிழ் கத்துக்கிட்டு தமிழில் பேசுவதை பெருமையாக நினைக்கிறார்கள். உலகத்திலேயே பழமையான மொழியும் தமிழ்தான். உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு இயக்குனர் செல்வராகவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்





