மலையாள சினிமா ரசிகர்களால் தொடர்ந்து கொண்டாடப்படுவதற்கு காரணம் அவர்களது யதார்த்தமான கதைகள்தான். நாயகனுக்காக கதை உருவாக்காமல் கதைக்கான கேரக்டரில் மட்டுமே ஹீரோக்கள் நடிக்கின்றனர். அதனால் உண்மையான யதார்த்த படங்களை தந்த தொடர்ந்து மலையாள சினிமா ரசிகர்களிடம் முதலிடம் பெற்று வருகிறது.
எம்புரான் எல்2 படத்தை தொடர்ந்து நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் தொடரும். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக ஷோபனா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தொடரும் படம் குறித்து நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, தொடரும் படத்திற்கான அன்பு மற்றும் வரவேற்பால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உண்மையிலேயே மிகவும் பணிவுடன் இருக்கிறேன். ஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு வார்த்தையும் என்னால் முழுமையாக வெளிப்படுத்த முடியாத வழிகளில் என்னை தொட்டுள்ளன.
இந்த கதைக்கு உங்கள் இதயங்களை திறந்ததற்கும் அதன் ஆன்மாவை பார்த்ததற்கும் அதை இவ்வளவு கருணையுடன் ஏற்றுக் கொண்டதற்கும் நன்றி. இந்த நன்றி உணர்வு என்னுடையது மட்டுமல்ல, இந்த பயணத்தில் என்னுடன் பயணித்து ஒவ்வொரு காட்சியிலும் தங்கள் அன்பையும் முயற்சியையும் உணர்வையும் கொடுத்த ஒவ்வொரு நபருக்கும் இது சொந்தமானது.
ரஞ்சித் எம் தருண்மூர்த்தி கே ஆர் சுனில் ஷோபனா சாஜிகுமார் ஜேக்ஸ் பிஜாய் நிசாத் யூசுப் சபீக் விபி மற்றும் எங்கள் அசாதாரண குழுவினருக்கு உங்கள் கலைத்திறன் மற்றும் ஆர்வம் தொடரும் படத்தை இப்படியாக மாற்றியது. இந்த படம் கவனத்துடன் உண்மையுடன் உருவாக்கப்பட்டது. இது இவ்வளவு ஆழமாக எதிரொலிப்பதை காண்பது ஒரு வெகுமதியை விட அதிகம்.
இது ஒரு உண்மையான ஆசீர்வாதம். என் முழு மனதுடன் நன்றி எப்போதும் அன்புடனும் நன்றியுடன் என்று அந்த பதிவில் நடிகர் மோகன்லால் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் மோகன்லால் சமீபத்தில் உடல் நலம் பாதித்த தனது நண்பர் நடிகர் மம்முட்டிக்காக சபரிமலைக்கு இருமுடி தாங்கிச் சென்று வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.





