கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் நெல்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஜெயிலர் படத்தை எடுத்திருக்கிறார். இதில் ரஜினிகாந்த் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடித்துள்ளனர். மலையாள பிரபலம் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஜரஃப் ஆகியோரும் ஜெயிலரில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், ஜெயிலரின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியாகின. அனிருத்தின் தெறிக்கும் இசையில், காவாலையா பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.
டைகர் கா ஹுக்கும் பாடலில் இடம்பெற்ற வரிகள் ரஜினி ரசிகர்களை உற்சாகமூட்டின. ஜெயிலர் படத்திற்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழை வழங்கி உள்ளது. படம் இரண்டு மணி நேரம் 49 நிமிடங்கள் ஓடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜெயிலரின் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

படம் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளை நம்பி எடுக்கப்பட்டிருப்பதும், அத்தனை நட்சத்திரங்கள் இருந்தாலும் ரஜினிக்கு மிக முக்கியத்துவம் அளிக்க பட்டிருப்பதும் ட்ரெய்லரில் இடம் பெற்ற காட்சிகள் உறுதிப்படுத்தின. வரும் பத்தாம் தேதி ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படம் திரையரங்குகளுக்கு வருவதால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் அடுத்ததாக எந்த படத்தை இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் தற்போது அவர், கைவிடப்பட்ட வேட்டை மன்னன் திரைப்படத்தை தொடர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கோலமாவு கோகிலா திரைப்படத்திற்கு முன்னதாகவே, சிம்புவுடன் இணைந்து வேட்டை மன்னன் படத்தை நெல்சன் இயக்கினார்.
ஜெய், ஹன்சிகா மோத்வானி, சந்தானம் உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படத்தின் சூட்டிங் பணிகள், பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்தப் படத்தை மீண்டும் தொடர நெல்சன் முடிவெடுத்திருப்பதாகவும், இது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே நெல்சன், கமல்ஹாசன் தயாரிப்பில் தனுசுடன் இணைய போவதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதேசமயம் தற்போது வேட்டை மன்னனை அவர் தொடர்வதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுவதால், நெல்சன் முதலில் எந்த படத்தை எடுப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





