சமீபத்தில் மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஹேமா கமிட்டி பிரச்சனையில் பிரபலமான மலையாள நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நல்ல கதையம்சம் நிறைந்த மலையாள சினிமா துறையில் பெண் நடிகைகள் மீதான பாலியல் விவகாரம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குறிப்பாக மலையாள சினிமா நடிகர் சங்க ( அம்மா) செயலாளர் சித்திக் மீது பாலியல் சார்ந்த பல புகார்கள் கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முன்பே தெரிந்திருந்த நடிகர் சங்கத்தின் தலைவர் மோகன்லால், இதுகுறித்து கண்டு கொள்ளாமல் இருந்தார் என அவர் மீதும் விமர்சனங்கள் எழுந்தன.
இதைத்தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து நடிகர் மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகள் அனைவரும் மொத்தமாக ராஜினாமா செய்த நிலையில், மலையாள நடிகர் சங்கம் அமைப்பு கலைக்கப்பட்டது. பாலியல் விவகார புகார்களால் நடிகர் சங்கமே ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டதும் கேரள மக்களிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் தற்போது மலையாள நடிகர் சங்கத்திற்கு தற்காலிக நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. வரும் 2025ம் ஆண்டில் ஜூன் மாதம் பொதுக்குழு கூடி நடிகர் சங்கத் தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மீண்டும் சங்கத்தை முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வந்தாக வேண்டும்.
இந்நிலையில் நடிகர் மோகன்லால் மீண்டும் தலைவராக வேண்டும் என்று பலரும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் துணைததலைவர் ஜெயன சேர்தலா, நடிகர் சுரேஷ்கோபி ஆகியோரும் பழைய நிர்வாகிகள் மீண்டும் பதவிக்கு வர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மோகன்லால் நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தலைவராகலாம் என்று எதிர்பார்ப்பு கேரளா சினிமாவில் நிலவுகிறது.
ஆனால் மலையாள நடிகர் சங்கத் தலைவராக மீண்டும் பதவி ஏற்க போவதில்லை என்று மோகன்லால் மறுப்பு தெரிவித்துள்ளார். நடிகர் சங்க பிரச்சனையால் தேவையில்லாத மன உளைச்சல் எனக்கு ஏற்படுகிறது இதனால் என்னால் படங்களில் கவனம் செலுத்தி நடிக்க முடியவில்லை என்று அவர் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் நிச்சயமாக அவர் மீண்டும் தலைவராக விரும்பவில்லை என்று உறுதியாகி உள்ளது.





