நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். கடைசியாக 2023ம் ஆண்டில் அவர் நடித்த துணிவு படம் வெளியானது. அதன்பிறகு அவரது படம் 2023ம் ஆண்டிலும், 2024ம் ஆண்டிலும் வெளிவரவில்லை. மகிழ் திருமேனி இயக்கத்தில் அவர் நடித்த விடாமுயற்சி படம், பல மாதங்களாக படப்பிடிப்பு நடந்து ரசிகர்களை வெறுப்பேற்றியது.
துணிவு படம் வெளியான அதே நாளில்தான் விஜய் நடித்த வாரிசு படம் வெளியானது. அதன்பிறகு விஜய் நடித்த லியோ படம் 2023ம் ஆண்டு அக்டோபரிலும், தி கோட் படம் 2024ம் ஆண்டு செப்டம்பரிலும் வெளியானது. விஜய் படங்கள் 2 வெளியான நிலையில் அஜீத் படமே இல்லாதது ஏகே ரசிகர்களை அதிருப்தியடைய செய்தது.
இந்த நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்புக்கு இடையே மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட்பேட் அக்லி என்ற படத்திலும் அஜீத்குமார் நடித்தார். அந்த படத்தின் ஷூட்டிங்கும் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அந்த படம் மே 1ல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே வருகிற பொங்கலுக்கு விடாமுயற்சி வெளியாகும் என்ற அறிவிப்பை டீசருடன் வெளியிட்டு படக்குழு ரசிகர்களை குஷிப்படுத்தியது. இந்த பொங்கல் தல பொங்கல் தான் என ஏகே ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்த நிலையில், டிசம்பர் 31ம் தேதி புத்தாண்டு வாழ்த்துகளை சொன்ன லைகா நிறுவனம், பொங்கலுக்கு விடாமுயற்சி ரிலீஸ் இல்லை என்ற குண்டை தூக்கி போட்டது.
இதனால் அஜீத்குமார் ரசிகர்கள் கோபத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர். முன்னணி நடிகர் அஜீத்குமார் படத்தை பொங்கல் ரிலீஸ் என அறிவித்துவிட்டு இப்படி பின்வாங்குவதா, 15 மாதங்களாகியும் ஒரு படத்தை முழுமையாக முடித்து ரிலீஸ் செய்ய முடியாதா என படத்தின் இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் குறித்து கடுமையாக இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.
விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை என்ற அறிவிப்பால் கொதித்துப் போய் இருக்கும் ஏகே ரசிகர்களை சமாதானப்படுத்த மிக விரைவில் விடாமுயற்சி படத்தின் டிரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டு அதற்கான முயற்சிகளை வேகப்படுத்தியுள்ளது. டிரெய்லரை தயார் செய்து, அதற்கு சென்சார் அனுமதி வாங்கிய நிலையில், 2 நிமிடம் 24 விநாடிகள் ஓடும் அந்த டிரெய்லர் வெளியீடு தேதியை விரைவில் அறிவிக்க உள்ளனர்.





