தெலுங்கில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாகர்ஜூனா. பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். இவரது மனைவி அமலா. தமிழில் கொடி பறக்குது மாப்பிள்ளை சத்யா உறவைக் காத்த கிளி மெல்ல திறந்தது கதவு போன்ற பல படங்களில் நடித்தவர். நடிகர் நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தான் சமந்தாவின் முதல் கணவர் என்பது ரசிகர்கள் அறிந்த தகவல்தான்.
நடிகர் நாகர்ஜூனா சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பல பிஸினஸ்களிலும் ஈடுபட்டு வருகிறார். அவர் மட்டுமின்றி தெலுங்கில் உள்ள பல நடிகர்கள் நடிப்பது மட்டுமின்றி பிஸினஸ்களில் அதிக ஆர்வம் காட்டி அதன்மூலமும் கணிசமான வருமானம் ஈட்டி வருகின்றனர். மேலும் பிக்பாஸ் தெலுங்கு தொகுப்பாளராகவும் நாகர்ஜூனா இருந்து வருகிறார்.
நடிகர் நாகர்ஜூனா தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக 1990களில் அவர் தமிழில் உதயம் ராட்சசன் இதயத்தை திருடாதே போன்ற படங்களில் நடித்தவர்தான். சமீபத்தில் ரஜினியுடன் கூலி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தனுஷ் உடன் குபேரா படத்திலும் நடித்திருந்தார்.
கூலி படத்தில் வில்லன் கேரக்டரில் நாகர்ஜூனா நடிப்பு மிக சிறப்பாக இருந்த போதிலும் படத்தில் திரைக்கதையில் அவரது கேரக்டர் அழுத்தமாக இல்லை என்று ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்தனர். தெலுங்கில் சிறந்த நடிகரான அவரை வில்லனாக கூலியில் நடிக்க வைத்து வீணடித்து விட்டதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது கடும் விமர்சனம் எழுந்தது.
இப்போது நடிகர் நாகர்ஜூனா தனது 100வது படத்தில் நடிக்கிறார். இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. இந்த படம் தெலுங்கு தமிழ் மலையாளம் இந்தி கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது. மேலும் இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் நடந்து முடிந்த நிலையில் இப்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தின் இயக்குனர் ர கார்த்திக். நெட்பிளிக்ஸ்சில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற மேட் இன் கொரியா படத்தை இயக்கியவர்தான் ர கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது.





