தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே அதிகம் பேசப்படும் நபர்களில் ஒருவராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். வங்கியில் பணிபுரிந்த அவர் அந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்காக சென்னை வர, இன்று மிகப்பெரிய உச்சத்திற்கு சென்று மோஸ்ட் வான்டெட் இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் முதலாவது திரைப்படமாக அவர் எடுத்த மாநகரம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இருப்பினும் லோகேஷ் கனகராஜ் யார் என்பதை பலருக்கும் தெரிய வைத்தது கைதி திரைப்படம்தான். ஒரே இரவில் நடக்கும் கதை. அதுவும் போலீசுக்கும் ரவுடிகளுக்குமான ஒரு யுத்தம், நடுவில் சிறையில் இருந்து ரிலீசான கைதி என விறுவிறுப்பான ஒரு திரைக்கதையை கொடுத்து பிரமாதப்படுத்தி இருந்தார் லோகேஷ் கனகராஜ்.
இதன்பிறகு மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய திரைப்படங்களை அவர் இயக்கினார். இதில் விக்ரம் திரைப்படத்தில் அவர் எல்சியூ என்னும் புதிய கான்செப்ட் அறிமுகப்படுத்தியிருந்தார். அதாவது கைதி படத்தில் இருக்கும் சில காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களை விக்ரம் திரைப்படத்தில் தொடர்புபடுத்தி அவர் கதை எழுதி இருந்தது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
குறிப்பாக அதன் கிளைமாக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா வந்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. இதைத்தொடர்ந்து லியோ படத்திலும் அந்த எல்சியு கான்செப்ட் இருக்கும் என படம் ஆரம்பிக்கும் போதே கூறி வந்த ரசிகர்கள், தங்கள் கற்பனைக்கேற்ப எல் சி யூ கதைகளை கூறி வந்தனர். லோகேஷ் கனகராஜுக்கே தெரியாத விஷயங்களை சிலர் சமூக வலைதளத்தில் கட்டவிழ்த்து வருவதாக சினிமா விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில் தற்போது ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். இது நிச்சயம் எல்சியூ கான்செப்டில் வராது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் பிறகு கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை லோகேஷ் இயக்குகிறார். பிறகு ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்தே தனியாக ஒரு திரைப்படம், அதன் பிறகு விக்ரம் 2 என அவரது பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இந்த சூழலில், கைதி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு முன்னாடியே ஒரு குறும்படம் வெளியாக இருப்பதாக நடிகர் நரேன் தெரிவித்துள்ளார். கைதி திரைப்படத்தில் பிஜாய் என்னும் காவல் அதிகாரியாக வந்த அவர், விக்ரமிலும் தோன்றினார். இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருக்கும் அவர், லோகேஷ் கனகராஜ் 10 நிமிடங்கள் ஓடும் ஒரு குறும்படத்தை எடுத்திருக்கிறார். இதில் நானும் நடித்திருக்கிறேன். எல் சி யூ வின் ஆரம்பக் கதையாக அது இருக்கும். இது ஓடிடி அல்லது யூ டியூபில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.





