தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் நட்டி என்கிற நடராஜ். இவர் பாலிவுட் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர். தமிழ் சினிமாவிலும் யூத், புலி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணி செய்திருக்கிறார். அவர் தமிழில் நாளை, சக்கர வியூகம், கதம் கதம், எங்கிட்ட மோதாதே சதுரங்க வேட்டை மிளகா, முத்துக்கு முத்தாக, கர்ணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்
குறிப்பாக மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் படத்தில் தனுஷூக்கு வில்லனாக நட்டி ஏற்று நடித்த போலீஸ் எஸ்பி வேடம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதேபோல் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் வில்லன் கேரக்டரில், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விவகாரம் செய்யும் கணவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தில், இன்ஸ்பெக்டர் வேடத்தில் நட்டியின் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. தொடர்ந்து ரசிகர்களின் அபிமானத்தை பெறும் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிகர் நட்டி நடித்து வருகிறார். தற்போது லைட் சவுண்ட் அண்ட் மேஜிக் என்ற நிறுவனம் தயாரிக்கும் ஆண்டவன் அவதாரம் என்ற படத்தில் நட்டி நடிக்கிறார்.
நஞ்சுபுரம், அழகு குட்டி செல்லம், சாலை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சார்லஸ், ஆண்டவன் அவதாரம் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக நட்டி நடிக்கிறார். அதுவும் முதன்முறையாக இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நட்டி நடிக்கிறார். நடிகர் ராகவ் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மற்ற நடிகர்களின் தேர்வு நடந்து வரும் நிலையில், கடந்த 9ம் தேதி ஆண்டவன் அவதாரம் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் துவங்கியது.
தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இந்த படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இது ஒரு சயின்ஸ் பிக்சன் படம் என்பதால், எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கதாபாத்திரங்கள் போன்று அதிலிருந்து இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இப்படம் வடிவமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்டவன் அவதாரம் படத்தில் இயக்குனர் சார்லஸ் கூறுகையில், இப்படத்துக்கு அவதாரம் என்று பெயரிட நினைத்தேன். அந்த டைட்டில் நடிகர் நாசரிடம் இருப்பதால், ஆண்டவன் அவதாரம் என்று பெயரிட்டேன். நட்டி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இது தந்தை – மகன், அண்ணன் – தம்பி வேடமாக இருக்காது. சயின்ஸ் பிக்சன் என்றாலும் நிகழ்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை வைத்து படம் ஆக்குகிறோம், என்று கூறியிருக்கிறார்.





