நடிகர் சூர்யா நடிப்பில் உருவான படம் கருப்பு. நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இந்த படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் அய்யனார் சாமியாகவும் வக்கீல் கேரக்டரிலும் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். மேலும் திரிஷா சுவாசிகா ஷிவதா மன்சூர் அலிகான் நட்டி நடராஜ் மற்றும் ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முதலில் தகவல் வெளியானது. ஆனால் டிஜிட்டல் விற்பனை நடக்காததால் படம் ரிலீஸ் தள்ளிப் போடப்பட்டது. வரும் 2026ம் ஆண்டில் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்ட நிலையில் ஜனநாயகன் பராசக்தி என்ற 2 பெரிய படங்கள் ரிலீஸாவதால் கருப்பு படம் பொங்கல் ரிலீஸ் வேண்டாம் என தவிர்க்கப்பட்டது.
இதற்கிடையே நடிகர் சூர்யா தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வருகிற 2026ம் ஆண்டில் மே 1ம் தேதியன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதனால் அதற்கு முன்பாக கருப்பு படத்தை ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டில் வெளியிட முடிவு செய்தனர்.
ஆனால் அப்போதும் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் வெளியாகும் என்ற தகவல் வெளியானது. எனினும் வேறு வழியில்லை. ரஜினி படத்துடன் சூர்யா படமும் களம் இறங்கட்டும் என்று கருதிய நிலையில் இப்போது ஜூன் 12ம் தேதி தான் ஜெயிலர் 2 ரிலீஸ் என ரஜினியே கூறிவிட்டார். அதனால் கருப்பு தமிழ் புத்தாண்டில் சிங்கிள் ஆளாக களத்தில் இறங்குவார் என்பது சூர்யா ரசிகர்களுக்கு பெரிய உற்சாகத்தை தந்துள்ளது.
இந்நிலையில் கருப்பு படம் குறித்து அதில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகர் நடிகர் நடராஜ் கூறியதாவது, கருப்பு படத்தில் நீதிமன்றம் குறித்த பல சுவாரசியமான தகவல்களை இயக்குனர் ஆர்ஜே பாலாஜி சொல்லி இருக்கிறார். நாமெல்லாம் வெளியில் இருந்துதான் நீதிமன்றத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் நீதிமன்றத்துக்குள் நடக்கும் விஷயங்கள் நமக்குத் தெரியாது.
குறிப்பாக ஒரு கேஸ் எப்படி நடத்தப்படுகிறது என்பது வக்கீலுக்கு தான் தெரியும். அதுபோன்ற பல விஷயங்களை ஆராய்ந்து இந்த படத்தில் அவர் காட்சிகள் அமைத்திருக்கிறார். அதனால் கருப்பு படம் ஒரு சுவாரசியமான வித்தியாசமான படமாக இருக்கும் என்று நடிகர் நட்டி நடராஜ் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார். சிங்கம் படம் போல கருப்பு படம் சூர்யாவின் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய படமாக இருக்கும் என்றும் ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது.





