தமிழ் சினிமாவில் இன்றைய காலகட்டத்தை ரி ரிலீஸ் சீசன் என்று தாராளமாக சொல்லலாம். ஏனென்றால் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்கள் ரி ரிலீஸ் செய்யப்படுகின்றன. இப்போது உயிருள்ள வரை உஷா மின்னலே காதலர் தினம் மௌனம் பேசியதே போன்ற படங்கள் இப்போது ரி ரிலீஸாகி திரையில் ஓடிக்கொண்டு இருக்கின்றன.
இன்றைய தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்கள் வன்முறையை மட்டுமே கதைக்களமாக கொண்டு வெளியாகின்றன. தொடர்ந்து ரத்தம் கத்தி துப்பாக்கி சத்தம் வன்முறை என பார்த்து பார்த்து சலித்துப்போன ரசிகர்கள், நல்ல கதையம்சம் கொண்ட யதார்த்தமான படங்களை பார்க்க மிகவும் விரும்புகின்றனர்.
அதனால் கடந்த 1980 90களில் வெளியான படங்கள் ரி ரிலீஸ் செய்யப்படும் போது அந்த படங்களை தியேட்டர்களில் காண அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் அதில் வரும் பாடல்கள் காமெடி காட்சிகளை மீண்டும் ரசிப்பதற்காக தியேட்டர்களுக்கு படை எடுத்து வருகின்றனர்.
நடிகர் விஜய் சேதுபதி வளரும் நடிகராக இருந்த காலகட்டத்தில் அவர் நடித்த ஒரு சில படங்கள் மிக நன்றாக இருந்தன. அவருக்கு அந்த படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தந்தன. அதில் ஒரு முக்கியமான படம் தான் சூது கவ்வும். இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த இந்த படம் கடந்த 2013ம் ஆண்டில் வெளியானது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி கடத்தல் குரூப் தலைவனாக இருப்பார். சஞ்சிதா ஷெட்டி அசோக் செல்வன் ரமேஷ் திலக் கருணாகரன் பாபி சிம்ஹா எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். ஆள் கடத்தல் கும்பலை மையப்படுத்திய கதைக்களத்தில் காமெடி காட்சிகளுடன் இந்த படம் உருவாகி இருந்தது. சூது கவ்வும் படத்தில் இடம்பெற்ற டார்க் காமெடி காட்சிகள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படம் கல்ட் கிளாசிக் படமாகவும் மாறியது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தைத் தொடர்ந்து சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களுக்கும் என்ற 2ம் பாகமாக கடந்த 2024ம் ஆண்டு வெளியானது. எம்எஸ் அர்ஜூன் இயக்கத்தில் வெளியானது. இந்த படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் இது வெற்றி பெறவில்லை. தமிழ் சினிமாவில் கல்ட் கிளாசிக் படங்கள் தற்போது வரிசையாக வருவதால் சூது கவ்வும் முதல் பாகம் படம் வருகிற 20ம் தேதி ரி ரீலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்துக்கான டிக்கெட் கட்டணம் 100 ரூபாய் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.





