கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீர் பகுதியில் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் அங்கு குடும்பங்களுடன் சுற்றுலா சென்றிருந்த 26 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி தரும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடி தாக்குதல் நடவடிக்கையை எடுத்தது.
நேற்றிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை 25 நிமிடங்களில் 24 ஏவுகணைகள் தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிக்கரமாக நடத்தியது. இதுகுறித்து பலரும் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்து பாராட்டுகளை வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் சினிமா பிரபலங்கள் பலரும் இந்திய ராணுவத்திற்கு தங்கள் ஆதரவையும் பாராட்டுகளையும் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர் நடிகர் பவன் கல்யாண் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது ஆபரேஷன் சிந்தூர் பற்றி சமூக வலைதளங்களில் பதிவிடும் பிரபலங்களுக்கு எச்சரிக்கை விடுத்து அவர் பேசியுள்ளார்.
இது குறித்து ஆந்திரா துணை முதல்வர் நடிகர் பவன் கல்யாண் கூறியதாவது, தேசிய பாதுகாப்பை குறைத்து மதிப்பிடும்படியான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். பிரபலங்களும் சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளவர்களும் தங்களது பதிவுகளில் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும்.
தேசத்துக்கு எதிரானதாக கருதப்படும் எந்த ஒரு உள்ளடக்கமும் கடுமையான நடவடிக்கைக்கு வழிவகுக்கும். எல்லைகளை பாதுகாப்பது பற்றி ஏபிசிடி கூட தெரியாமல் ஆபரேஷன் சிந்தூர் பற்றி தெருக்களில் நாய்கள் குரைப்பது போல் சமூக ஊடகங்களில் குரைக்காதீர்கள்.
பிரபலங்கள் அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பு தகவல்களை சரிபார்க்க வேண்டும். தவறான தகவல் பதிவுகளை பரப்பி முக்கியமான காலங்களில் தேசிய ஒற்றுமையை குலைக்க கூடாது என்று நடிகர் பவன் கல்யாண் கூறியிருக்கிறார். அது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





