நடிகர் பிரபு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன். தந்தையை போலவே, இவரும், கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர். இப்போதும், தமிழ் படங்களில் அவ்வப்போது அவரது வயது, உருவத்துக்கேற்ற கேரக்டர்களில், சிறப்பாக நடித்து வருகிறார். இவரது மகன் விக்ரம் பிரபுவும் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், சென்னையை அடுத்துள்ள கொளத்தூரில் நடந்த கலைஞர் 100 பொதுக்கூட்டத்தில், நடிகர் பிரபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், கொட்டும் மழையில், மேடையில் குடைக்கு கீழே நின்றபடி பிரபு பேசியதாவது,
கருணாநிதியை, நான் அப்பா என்றுதான் அழைப்பேன். அவர் என் மீது அளவுகடந்த அன்பு கொண்டிருந்தார். எனக்கு கலைமாமணி, எம்ஜிஆர் விருது போன்றவற்றை வழங்கினார். நான் பெங்களூருவில் ஸ்கூலில் படித்துக்கொண்டிந்த போது, என் பள்ளிக்கு எதிரில் உள்ள உட்லண்ட்ஸ் ஓட்டலுக்கு கருணாநிதி வந்திருந்தார். தகவலறிந்து அவரை ஓடிச் சென்று பார்த்தேன். நீ இங்கு படிக்கிறேன்னு கணேஷ் சொல்லுச்சு, என்று கூறி, இரண்டு மணி நேரம் என்னுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்பாவும், கருணாநிதியும் சில காலம் சந்திக்காமல் இருந்துள்ளனர். அப்போது ஒருமுறை என்னிடம் பேசிய கருணாநிதி, உங்கப்பா படத்தை பார்ப்பதற்காகவே, முரசு என்ற சானலை துவங்க சொன்னேன். உங்கப்பாவை நேரில் பார்க்க முடியாததால், டிவியில் அவர் கன்னத்தை தொட்டு கொஞ்சிக்கொண்டு இருக்கிறேன், என்றார்.
நான், காவலுக்கு கெட்டிக்காரன் என்ற படத்தில் நடித்தேன். அந்த படத்தின் கதை வசனகர்த்தா கருணாநிதி தான். அதில் கிளியோபாட்ரா ஓரங்க நாடகம் இடம்பெற்ற காட்சிகள் வந்தன. அதற்கான வசன காட்சிகளை கருணாநிதி எழுதிவிட்டு, இந்த வசனங்களை கணேஷ் பேசுவார், இவன் (பிரபு) ஒழுங்காக பேசுவானா என்று கூறி, அந்த வசனங்கள் எழுதிய தாள்களையும், அவர் பேசிய கேசட் ஒலிப்பதிவையும் எனக்கு அனுப்பி வைத்தார்.
அப்போது, அந்த வசனங்களை உன் அப்பாவிடம் ஒருமுறை கேட்டுக்கோ என்று கருணாநிதி கூறியிருந்தார். அந்த வசன ஒலிப்பதிவு கேசட்டை கேட்ட என் அப்பா, அவரது கம்பீர குரலில் அதே வசனங்களை பேசி, என்னிடம் கேசட்டை தந்தார். அந்த கேசட்டை, கலைஞர் டிவியில் போடுவதற்காக கருணாநிதி கேட்டிருந்தார். ஆனால், என்னிடம் பத்திரமாக இருந்த அந்த கேசட்டை யாரோ, அடித்துச் சென்றுவிட்டனர், என்று குறிப்பிட்டு வருத்தப்பட்டார்.





