நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ராம்குமார், பிரபு என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ராம்குமாரின் மகன் மற்றும் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த். இவர் ஈசன் புரடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை சில ஆண்டுகளுக்கு முன் தயாரித்தார்.
இதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் 30 சதவீதம் வட்டிக்கு வாங்கி இருந்தார். வாங்கிய கடனை துஷ்யந்த் திருப்பி செலுத்தவில்லை. இதையடுத்து பலமுறை அவரிடம் கடனை திருப்பிக் கேட்ட அந்த நிறுவனம் துஷ்யந்த் மீது சென்னை ஹை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில், நடிகர் சிவாஜி வாழ்ந்து மறைந்த வீடான தி.நகர் போக் ரோட்டில் உள்ள அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், அன்னை இல்லம் எனது வீடு அல்ல. என் தம்பி பிரபுவின் வீடு. அவருக்கு சொந்தமான அந்த வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை கோர்ட் ரத்து செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து ராம்குமாரின் தம்பியும் நடிகர் திலகம் சிவாஜியின் 2வது மகனுமான நடிகர் பிரபுவும் இதுகுறித்து சென்னை ஹை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் அன்னை இல்லத்தின் முழு உரிமையும் எனக்கு மட்டுமே உள்ளது. எனது சகோதரர் ராம்குமார் தொடர்புடைய நிதி பிரச்சனையில் எனக்கு சொந்தமான வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், அண்ணனின் 3 கோடி ரூபாய் கடனை அடைத்து விட்டு, அந்த பணத்தை அண்ணனிடம் இருந்து பிரபு பெற்றுக் கொள்ளலாமே என்று நடிகர் பிரபு தரப்பிற்கு யோசனை தெரிவித்தார்.
அப்போது இந்த வழக்கில் வாதிட்ட பிரபுவின் தரப்பு, ராம்குமார் நிறைய பேரிடம் நிறைய கடன் வாங்கியுள்ளார். அவருடைய கடனை நான் திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளேன். வாழ்நாளில் இதுவரை நான் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது கிடையாது. அன்னை இல்லத்தில் அண்ணனுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு ஏப்ரல் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தன் அண்ணன் ராம்குமார் பொறுப்பின்றி பலரிடம் கடன் வாங்குபவராக இருப்பதால் அப்படிப்பட்டவருக்கு நான் உதவ முடியாது என்பதை நடிகர் பிரபு கோர்ட்டில் பகிரங்கமாக கூறியிருக்கிறார்.





