நடிகர் பிரசாந்த், தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவுக்கு உரிய லட்சணங்களுடன் நடிக்க வந்தவர். சிவந்த நிறம், கட்டழகான உடல், நல்ல உயரம், அரும்பு மீசை, துருதுருப்பான பார்வை, ஹேர் ஸ்டைல், நவரசத்திலும் வெளிப்படும் நடிப்பு திறமை, நடனம், சண்டை காட்சிகளில் பயிற்சி என ஒரு கதாநாயகனாக்கி உருவாகி தான் பிரசாந்த் சினிமாவுக்குள் வந்தார்.
இதற்கு காரணம் அவரது தந்தை நடிகர் தியாகராஜன். அவர் 1980களில் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். கொம்பேறி மூக்கன், தீச்சட்டி கோவிந்தன், மலையூர் மம்பட்டியான், நீங்கள் கேட்டவை உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தவர். துவக்கத்தில் ஹீரோவாகவும், பிறகு வில்லனாகவும் நடித்து அசத்தியவர்.
வைகாசி பொறந்தாச்சு படத்தில் பிரசாந்த் அறிமுகமாகி வண்ண வண்ண பூக்கள், செந்தமிழ் பாட்டு, ராசாமகன், திருடா திருடா, ஜீன்ஸ், பார்த்தேன் ரசித்தேன், அப்பு, கண்ணெதிரே தோன்றினாள் என பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக மாறினார். அப்போது பெற்றோர் பார்த்து, கிரஹலட்சுமி என்பவரை திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அந்த குடும்ப வாழ்க்கை பிரசாந்துக்கு நீடிக்கவில்லை.
அதன்பிறகு கிரஹலட்சுமியை விவாகரத்து செய்த நடிகர் பிரசாந்த், தொடர்ந்து படங்களில் நடித்தார். ஆனால் முன்பு போல அவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும், ஆதரவும் கிடைக்கவில்லை. தவிர நல்ல கதையம்சம் கொண்ட படங்களும் அவருக்கு கிடைக்கவில்லை. மம்பட்டியான், பொன்னர் சங்கர் உள்ளிட்ட படங்களில் நடித்த பிறகு, பிரசாந்த் சினிமாவை விட்டு பல ஆண்டுகள் ஒதுங்கி இருந்தார்.
இப்போது மீண்டும் விஜய் நடித்துள்ள தி கோட் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார். அதே நேரத்தில் தனது தந்தை தியாகராஜன் இயக்கத்தில், அந்தகன் என்ற படத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் பார்வை திறனற்ற பியானோ வாசிக்கும் கலைஞராக அவர் நடித்துள்ளார். சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்டோரும் அந்தகன் படத்தில் நடித்துள்ளனர்.
வருகிற 9ம் தேதி அந்தகன் படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் பிரசாந்திடம், உங்களது மறுமணம் எப்போது என்று கேள்வி கேட்கப்பட்டது. அப்போது கண்டிப்பாக எனக்கு மீண்டும் திருமணம் நடக்கும், நான் அதற்கு தயாராகி விட்டேன், என்றார். பெண் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டதற்கு, பெண் பெண்ணாக இருக்க வேண்டும், என்று வித்யாசமான பதிலை கூறியிருக்கிறார் நடிகர் பிரசாந்த்.





