இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடிப்பில் வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படத்தில் இளையராஜா இசையமைத்த இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்சக்குருவி மற்றும் ஒத்த ரூபா தாரேன் என்ற 3 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. இந்த பாடல்கள் திரையில் வந்த போது ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.
தனது இசையில் உருவான இந்த பாடல்களை தனது அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா, குட்பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து சமீபத்தில் இளையராஜாவின் சகோதரர் இசையமைப்பாளர் கங்கை அமரனும் தனது அண்ணனுக்காக ஆதரவு தெரிவித்து பேசியிருந்தார். இதுகுறித்து கங்கை அமரன் கூறுகையில், 7 கோடி ரூபாய்க்கு ஒரு மியூசிக் டைரக்டரை வைத்திருக்கிறீர்கள். அவர் போட்ட பாட்டுக்கு கைதட்டு வராமல் எங்களது பாட்டுக்கு ரசிகர்கள் கைதட்டுகின்றனர்.
அப்படி இருக்கும்போது அதற்கான கூலி எங்களுக்கு வரவேண்டும். அந்த மியூசிக் டைரக்டருக்கு அத்தனை கோடிகள் கொடுத்தும் நாங்கள் கொடுத்த இசையை அவரால் கொண்டுவர முடியவில்லை. அப்படியானால் அந்த படத்தின் வெற்றியில் எங்களுக்கும் பங்கு இருக்கிறது அல்லவா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் கங்கை அமரனின் மகன் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி நடிகர் பிரேம்ஜி, அஜீத்குமாரின் மிக தீவிரமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் பிரேம்ஜியிடம் கேட்ட போது, அண்ணனுக்கு சப்போர்ட்டாக தம்பி பேசுகிறார். என் அண்ணனுக்கும் ஒரு பிரச்சனை என்றால் நானும் அவருக்கு ஆதரவாக பேசுவேன். அதுபோல்தான் இளையராஜாவுக்கு ஆதரவாக என் அப்பா பேசினார்.
அடுத்து இளையராஜா பாடல்கள்தான் குட் பேட் அக்லி படம் ஹிட் ஆச்சா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அதெல்லாம் இல்ல உண்மை என்னான்னு எல்லாருக்குமே தெரியும். குட் பேட் அக்லி படம் அஜீத்தால் மட்டுமே வெற்றி பெற்றது என்று நடிகர் பிரேம்ஜி கூறியிருக்கிறார். அப்பாவின் கருத்தை மகனே மறுத்து பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





