இந்திய சினிமாவில், மலையாள மொழி சினிமாக்களுக்கு எப்போதுமே சினிமா ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பும், சிறப்பு கவனமும் உண்டு. ஏனெனில் கதைகளை நம்பி படம் எடுக்கும் இயக்குனர்களே அங்கு அதிகம். யதார்த்த சினிமாக்களை, பொறுப்புள்ள கதைகளை சிறந்த திரைக்கதையில் படமாக்கி தருவதில் மலையாள இயக்குனர்கள் பெயர் பெற்றவர்கள்.
ஆனால் சமீபகாலமாக கேரளம் சினிமா துறையில், பெண்கள் அதிகளவில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக எழுந்த புகார்களை அடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில், 2017ம் ஆண்டில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட விசாரணைகளின்படி அவரது அறிக்கையில், சினிமா வாய்ப்புக்காக வரும் பெண்கள் பலவிதங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் அழுத்தங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்று தெரிவித்தது மலையாள சினிமாத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மேலும் பல மலையாள நடிகைகள் இப்போது தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பொதுவெளியில் பேச ஆரம்பித்து விட்டனர். இதையடுத்து அம்மா நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவர் அந்த பதவியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
மேலும் நீதிபதி ஹேமா விசாரணை அறிக்கை வெளியான நிலையில், அம்மா நடிகர் சங்கம் சார்ந்த நிர்வாகிகள் யாரும் அது குறித்து கருத்து தெரிவிக்கவோ, அது குறித்து வரவேற்கவோ செய்யவில்லை. இதுவும் மலையாள சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடிகைகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல், சீண்டல் குறித்து பலமுறை அம்மா நடிகர் சங்க நிர்வாகிகளை அணுகிய போது, அவர்கள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தியதும், இந்த புகார்களை எல்லாம் புறக்கணித்து கண்டுகொள்ளாமல் ஒதுங்கியும் இப்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
இந்த புகாரில் குறிப்பாக சங்கத்தின் தலைவராக இருக்கும் நடிகர் மோகன்லால் பெயரும் பலமாக அடிபட்ட நிலையில் இப்போது அம்மா சங்கத்தை சேர்ந்த தலைவர் மோகன்லால் உள்பட செயற்குழு சார்ந்த 16 நிர்வாகிகளும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்து விட்டனர். அவர்கள் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நிர்வாக கமிட்டியை கலைத்து விட்டோம். 2 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தி புதிய கமிட்டி உருவாக்கப்படும், என்றும் அதில் தெரிவித்துள்ளனர்.





