சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கிளாதிரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பி. ஏழ்மையான குடும்பத்தில் விவசாய கூலித் தொழிலுக்கு செல்பவர்கள். முத்துக்கருப்பி, தினமும் கூலி வேலைக்கு சென்று அந்த வருமானத்தில் பணத்தை சிறுக சிறுக சேகரித்தார். கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த ரூ. 1 லட்சம் பணத்தை பாதுகாப்பாக சேமித்து வைக்க தெரியாமல் ஒரு டப்பாவில் போட்டு மண்ணில் புதைத்து வைத்திருக்கிறார்.
சில மாதங்கள் கழிந்த நிலையில் வீட்டில் நடத்த வேண்டிய விசேஷம் ஒன்றுக்காக மண்ணை தோண்டி அந்த டப்பாவை எடுத்த போது அதில் இருந்த 500 ரூபாய் தாள்கள் அனைத்தையும் கரையான் அரித்து சேதப்படுத்தியிருந்தது. இப்படி சிறுக சிறுக சேகரித்து வைத்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை செலவு செய்ய முடியாமல் கரையான் அரித்து விட்டதே, என்னுடைய பணம் இப்படி வீணாகி விட்டதே என கதறி அழுதிருக்கிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ், பணத்தை இழந்த அந்த பெண் முத்துக்கருப்பி மற்றும் அவரது குடும்பத்தினரை தனது மாற்றம் சேவை அமைப்பு அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து, ஒரு பெட்டியில் 1 லட்சம் ரூபாய் பணத்தை வைத்து அந்த பெண்ணுக்கு உதவி செய்திருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் கூறுகையில், கிராமத்துல கூலி வேலை பண்ற பேமிலி. கொஞ்சம் கொஞ்சமா சேர்த்த பணத்தை மண்ணுல குழி தோண்டி ஒரு டப்பாவுல போட்டு ஒரு லட்சம் ரூபா பணத்தை மூடி வெச்சிருக்காங்க. அவங்க பொண்ணுக்கு பங்ஷனுக்காக மண்ணை தோண்டி டப்பாவுல இருந்த பணத்தை எடுத்திருக்காங்க.
மொத்த பணத்தையும் கரையான் அரிச்சிட்டிருக்கு. நான் அவங்களை வரழைச்சு அதே மாதிரி ஒரு பாக்ஸ்ல ஒரு லட்சம் ரூபா போட்டுக் கொடுத்து அவங்களை சந்தோஷப்படுத்தலாம்ன்னு நான் ஆசைப்பட்டேன். அதனால் அவங்களை வரச்சொன்னேன். ராகவேந்திரா அப்பா மடியில வெச்சு அந்த பணத்தை கொடுப்போம். அவங்க திறந்து பார்த்து சந்தோஷப்படட்டும்.
ஏன்னா இது நான் கொடுக்கலே, ராகவேந்திரா அப்பாதானே இந்த பணத்தை கொடுக்கிறார் என்று ராகவா லாரன்ஸ் கூறி அந்த ஒரு லட்சம் ரூபாய் பணப்பெட்டியை அந்த பெண்ணுக்கு கொடுத்து உதவியிருக்கிறார். நடிகர் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே மாற்றம் என்ற அமைப்பின் சார்பில் பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்துவரும் நிலையில் அவரது இந்த மனிதநேயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.





