மலையாளத்தில் பல படங்களில் கவர்ச்சியான கேரக்டர்களில் நடித்தவர் ஸ்வேதா மேனன். தமிழிலும் இவர் அரவாண் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். வரும் 15ம் தேதி மலையாள திரை உலகில் உள்ள அம்மா நடிகர் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இப்போது நடந்து வருகின்றன.
கடந்தாண்டில் அம்மா நடிகர் சங்க தலைவராக இருந்த மோகன்லால் ராஜினாமா செய்து விட்டார். இந்நிலையில் தற்போது நடக்கும் தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என்றும் அவர் கூறிவிட்டார். இதையடுத்து பலரும் மலையாள நடிகர் சங்கமான அம்மா சங்கத்தில் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டுள்ளனர்.
அந்த வகையில் நடிகை ஸ்வேதா மேனனும் நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாட்ஷா படத்தில் வில்லனாக நடித்த நடிகர் தேவன் போட்டியிடுகிறார். ஆனால் ஸ்வேதா மேனன் மீது இருக்கும் அபிமானத்தை குறைக்கும் விதமாக, சமீபத்தில் அவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நடிகை ஸ்வேதா மேனன், எப்போதோ பேட்டி ஒன்றில் கூறிய சர்ச்சையான கருத்தை முன்வைத்து அதன் மூலமாக இப்போது அவர் மீது போலீசில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த வழக்கை நீதிமன்றம் இப்போது நிறுத்தி வைத்துவிட்டது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த நடிகர் ரகுமான் ஸ்வேதா மேனனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து நடிகர் ரகுமான் வெளியிட்ட ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, டியர் ஸ்வேதா உங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது கண்டு நான் மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்தேன். இந்த அநீதியை பார்த்ததும் என் இதயம் கோபத்தால் கொதித்தது. உங்களை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக எனக்கு நன்றாக தெரியும். இத்தனை ஆண்டுகளில் நீங்கள் ஒரு நல்ல நண்பராக இருந்து வருகிறீர்கள்.
திரையில் நான் சந்தித்த அன்பான நேர்மையான மனிதர்களில் நீங்களும் ஒருவர். நாம் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட அந்த சமயத்தில் உண்மையான நட்பை என்னிடம் வெளிப்படுத்தினீர்கள். இப்போது இருக்கும் இந்த சூழல் கொஞ்சம் மோசமானதாக தான் இருக்கிறது. உங்கள் நல்ல பெயரை குறைப்பதற்கான அப்பட்டமான முயற்சி இது என்பது நன்றாகவே தெரிகிறது. இதனால் உங்கள் மனதைரியம் உடைந்து விடாதீர்கள். இப்போது அடிக்கும் புயலை விட நீங்கள் வலுவானவர். நீங்கள் மலையாள நடிகர் சங்கத்தின் மிகச்சிறந்த தலைவராக வருவீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று நடிகர் ரகுமான் கூறியிருக்கிறார்.





