கடந்த 2000ம் ஆண்டுகளில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நடிகர் விஜயகாந்த் பதவி வகித்தார். பொதுச்செயலாளராக நடிகர் சரத்குமார் இருந்தார். அப்போது நடிகர் சங்கத்துக்கு நிறைய கடன்கள் இருப்பதை அறிந்த சங்கத்தின் தலைவர் விஜயகாந்த், துபாய் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் கலை நட்சத்திர இரவுகளை நடத்தி அதன்மூலம் வரும் கணிசமான வருமானத்தில் நடிகர் சங்க கடன்களை அடைக்க திட்டமிட்டார்.
அதே போல் அந்த கலை நட்சத்திர இரவுகளை நடத்தி கடன்களையும் அடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கலை நட்சத்திர இரவு நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்ற முன்னணி நட்சத்திர நடிகர்களையும் பங்கேற்க வைத்தார். ரஜினி கமல் போன்றவர்கள் இதுபோன்ற கலை இரவு நிகழ்ச்சிகளுக்கு அதுவரை வராதவர்களாக இருந்தும் விஜயகாந்த் பேச்சை மீற முடியாமல் அவர்களும் கலந்துக்கொண்டனர்.
அப்போது 2002ம் ஆண்டில் சிங்கப்பூரில் நடந்த கலை நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் சரத்குமார் உள்ளிட்டோர் மேடையில் இருந்தனர். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் சிலர் மேடைக்கு வந்து ரஜினி கமல் ஆகியோரிடம் கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது மேடைக்கு வந்த ரசிகர், நீங்கள் எங்களுக்கு மிக முக்கியம். ஆனால் அடிக்கடி அமைதியை தேடி இமயமலைக்கு போய்விடுகிறீர்களே என கேள்வி எழுப்பினார்.
அதற்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்து கூறியதாவது, அமைதியை தேடி நான் போறேன்னு சொன்னா என்னோட வேலையை இப்போ நான் செய்றேன். என்னுடைய வேலையில் நிறைய நிர்பந்தம் இப்போ வந்துடுச்சு. எங்கிட்ட இருந்து நிறைய விஷயங்களை எதிர்பார்க்கறாங்க. அவங்க எதிர்பார்ப்புகளை என்னால நிறைவேத்தி கொடுக்க முடியுமாங்கற சந்தேகம் எனக்கு வருது.
ரெண்டாவது, ரொம்ப சரியான சப்ஜெக்ட் கிடைக்கறது ரொம்ப கஷ்டமாக இருக்கு. மூன்றாவது 26 வருஷமாக நடிச்சிட்டு இருக்கேன். இன்னும் எத்தனை காலம் என்னை நடிக்க சொல்றீங்க? நான் முதலில் இருந்து சொல்லிட்டு இருக்கேன். நான் வந்து முதலில் ஒரு மனிதன். என்னுடைய தொழில்தான் நடிப்பே தவிர நடிப்பே என்னுடைய வாழ்க்கை அல்ல. கடந்த 26 வருஷத்துல ஆண்டவன் புண்ணியத்துல நிச்சயமா ஏதோ சாதிச்சிருக்கேன். குண்டுசட்டிக்குள்ள குதிரை ஓட்டற மாதிரி இதுல இன்னொரு படம் இன்னொரு படம் என்று அதிலேயே வாழ்க்கை போயிடும். ஏதாவது அச்சீவ் பண்ணனும்.
நான் ஏதாவது மாற்றத்தை விரும்புகிறேன். வித்யாசமாக பண்ண ஆசைப்படுகிறேன். இதுல பண்ணின சாதனை போதும் என்று நினைச்சிட்டு இருக்கேன். யங்ஸ்டர்ஸ் நிறையா வந்துட்டாங்க. அவங்க முன்னாடி வரட்டும். அவங்க ஆடட்டும். நான் கேலரியில் உட்கார்ந்து பார்க்கறேன். நானே ஆடிட்டே இருந்தா நல்லா இருக்காது ஓகே. அமைதியை தேடி நான் போறேன் என்றால் ஏதோ செய்றதுக்கு நான் அமைதியை தேடிப் போக ஆண்டவன் அனுப்பிச்சிட்டு இருக்கான் என்று அந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த பேசியிருக்கிறார்.





