நடிகர் ரஜினிகாந்த் எப்போதுமே அவர் பங்கேற்கும் விழாக்களில், பொது நிகழ்ச்சிகளில் ஏதேனும் குட்டி கதை சொல்லி அதில் ஒரு ஆன்மீக தத்துவத்தை வெளிப்படுத்துவார். அவர் சொல்லும் விஷயங்கள் பெரிய அளவில் ரசிகர் மத்தியில் வரவேற்பைப் பெறும். அந்த வகையில் ஜெயிலர் பட விழாவில் அவர் சொன்ன காக்கா கழுகு கதை பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் சொன்ன அந்த கதையில் கழுகுவாக ரஜினியையும், காக்கையாக நடிகர் விஜயையும் குறிப்பிட்டு சொன்னதாக ஒரு சர்ச்சை எழுந்ததால் அந்த விவகாரம் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் பிரச்சினையாக உருமாறியது. இதையடுத்து லால் சலாம் பட விழாவில் பேசிய ரஜினிகாந்த், நான் அப்படி ஒரு அர்த்தத்தில் அந்த கதையை சொல்லவில்லை. வேண்டுமென்றே அப்படி ஒரு வதந்தியை சிலர் கிளப்பி விட்டுவிட்டனர் என்று விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் வேட்டையன் படம் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், காக்கா கழுகு கதைக்கு பதிலாக இந்த முறை கழுதை கதை கூறினார். அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, இயக்குனர் ஞானவேல் என்னிடம் வந்து பேசிய போது புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும் மாதிரி நீங்க நடிக்கணும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பதாக கூறினார்.
அப்போது எனக்கு ஒரு கதை ஞாபகத்துக்கு வந்தது. பெரிய பள்ளத்தாக்கில் இறங்கி துணி துவைக்கும் டோபி ஒருவர், துணி பொதியை சுமக்க கழுதை ஒன்றை வைத்திருந்தார். ஒருநாள் அந்த கழுதை திடீரென காணாமல் போய்விட்டது. பல இடங்களில் டோபி கழுதையை தேடுகிறார். ஆனால் கழுதை கிடைக்கவில்லை. அந்த சோகத்தில் ஒரு மரத்தடியில் போய் எதுவும் பேசாமல் அந்த டோபி அமர்ந்து கொள்கிறார். அங்கு ஞானி வந்துவிட்டதாக அங்குள்ள மக்கள் அவரை நினைக்கிறார்கள். சிலர் அவரது சீடர்களாகவும் மாறுகிறார்கள்.
அவர் பேசவில்லை என்றாலும், அவர் சிக்னல் காட்டினால் நல்லது நடக்கிறது என மக்கள் நம்புகிறார்கள். இந்த சூழலில் ஒரு கழுதை அங்கு வருகிறது. அதை பார்த்துவிட்டு என் கழுதை வந்திருச்சு என்று அந்த டோபி சத்தமாக கத்துகிறார். அப்போதுதான் அங்கிருந்த சிஷ்யர்கள் உட்பட அனைவருக்கும் அவர் கழுதையை தொலைத்த டோபி என தெரியவருகிறது. உடனே அவரின் சீடர்கள் சிலர் எதுவும் பேசாதீங்க, இப்போது நீங்கள் பெரிய ஞானி என்று சொல்லி அமைதியாக உட்கார வைத்து விடுகிறார்கள்.
அந்த டோபி போலதான் நானும். முள்ளும் மலரும் படத்தில் நான் பேசி நடித்தது எல்லாம் இயக்குனர் மகேந்திரன் சொல்லித் தந்து பேசிய வசனங்கள், நான் நடித்த அந்த காட்சிகளாக வெளிவந்தன. அதற்கு பின்னால் ஒரு சீனுக்கு 15 டேக்கெல்லாம் வாங்கினேன். டோபி மாதிரி அப்படி நடந்து விட்டது. என்னை நல்ல நடிகன் என்று சொன்னார்கள். பைரவி, போக்கிரி ராஜா, முரட்டுக்காளை மாதிரியான படங்கள் பண்ணி என் டிராக்கை மாற்றிக் கொண்டேன் என்று இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.





