மலையாளத்தில் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் ஜோஜூ ஜார்ஜ். இவர் மலையாளத்தில் பல படங்களை டைரக்ட் செய்திருக்கிறார். மேலும் தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக ஜகமே தந்திரம் பஃபூன் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த தக்லைஃப் உள்ளிட்ட படங்களில் ஜோஜூ ஜார்ஜ் நடித்திருக்கிறார்.
கடந்த ஆண்டில் மலையாளத்தில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நாடோடிகள் பட நடிகை அபிநயா நடித்த பனி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சமூக விரோதிகளாக 2 இளைஞர்கள், டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒன்றில் அபிநயாவிடம் பாலியல் சீண்டல் செய்வதை அவரது கணவர் ஜோஜூ ஜார்ஜ் கண்டிக்கிறார்.
அவர்கள் இருவரையும் அடித்து விரட்டுகிறார். இதை மனதில் வன்மம் வைத்து அந்த 2 இளைஞர்களும் ஜோஜூ ஜார்ஜ் வீட்டுக்குள் நுழைந்து விடுகின்றனர்.
தனியாக இருக்கும் அபிநயாவை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்கின்றனர். இந்த விவகாரத்தில் ஜோஜூ ஜார்ஜ் குடும்பம் சார்ந்தவர்களையும் அவரது நண்பர்களையும் அவர்கள் தொடர்ந்து அழிக்கின்றனர். அவர்களை ஜோஜூ ஜார்ஜ் பழிவாங்குவதே இந்த படத்தின் கதை. ஆனால் பனி படம் அளவுக்கு இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான வரவு படம் சரியான வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தை இயக்குனர் ஷாஜி கைலாஷ் டைரக்ட் செய்திருந்தார்.
இந்த நிலையில் ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் உரையாடிய நடிகர் மற்றும் இயக்குனர் ஜோஜூ ஜார்ஜ் கூறுகையில், எனக்கு எதிராக முன்னணி நடிகர் ஒருவரும் அவரது மனைவியும் எதிர்மறையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார். அவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் பேசிய அவர், சிலர் பணம் கொடுத்து தங்களைப் பற்றிய நல்ல செய்திகளையும் மற்றவர்களை பற்றிய எதிர்மறை செய்திகளையும் பரப்புகிறார்கள்.
எனக்கு எதிராகவும் இப்படிப்பட்ட முயற்சிகள் நடக்கின்றன. ஒரு முன்னணி நடிகரும் அவரது மனைவியும் இதன் பின்னணியில் உள்ளனர். மலையாள சினிமாவில் பணம் கொடுத்து பல பிரபலங்கள் தங்களைப் பற்றி பிரச்சாரம் செய்து வருகின்றனர். சமூக ஊடகங்கள் மற்றும் சில ஊடக தளங்கள் மூலம் பொதுமக்களின் கருத்தை மாற்றும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.
உண்மையை விட உருவாக்கப்பட்ட பொய் பிம்பங்களை தற்போது அதிகம் பேசப்படுகின்றன. நான் நடித்துள்ள வரவு திரைப்படம் வெளியானது முதல் அதற்கு எதிராகவும் திட்டமிடப்பட்ட எதிர்மறை பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன என்றும் ஜோஜூ ஜார்ஜ் கூறியிருக்கிறார். நடிகர் ஜோஜூ ஜார்ஜ் கூறிய இந்த கருத்து மலையாள சினிமாவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.





