டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் வலுத்து வருகிறது. டெல்லியை தொடர்ந்து பிற மாநிலங்களிலும் தமிழ்நாட்டிலும் மாணவர்கள் போராட்டம் வலுத்து வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.
சென்னையில் நீலம் அமைப்பு சார்பில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் இயக்குனர்கள் பா ரஞ்சித் வெற்றிமாறன் நடிகைகள் ரேவதி ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் இயக்குனர் அமீர் பேசியதாவது, நீட்டைக் கொண்டு வராமல் பார்த்துக்கிறோம். எங்ககிட்ட அதுக்கான ரகசியம் இருக்குன்னு சிலர் சொல்லுவாங்க.
அவங்களும் கொண்டு வர மாட்டாங்க. அவங்களும் ஆண்டு முடிச்சிட்டு போயிடுவாங்க. கடைசிவரை அந்த ரகசியம் சொல்ல மாட்டாங்க. அனிதா மரணத்திற்கு பின் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கொடுக்க வீட்டுக்கு சென்றவர்களும் அதிகாரத்தில் இருப்பாங்க. அவங்களும் சொல்ல மாட்டார்கள்.
நீட் தேர்வு குறித்து பேச வந்த பலருக்கு அதைப் பற்றிய தொழில்முறை அறிவு இல்லாவிட்டாலும் நம் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் சிந்தனையும் தான் அனைவரையும் இங்கு ஒன்று சேர்த்துள்ளது. அனிதாவின் மரணத்தில் தொடங்கிய அந்த ஓலம் இன்று வரை ஓயவில்லை. நீட் தேர்வுக்கு எதிராக அரசியல்வாதிகள் ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவது முற்றிலும் ஏமாற்று வேலை.
கோடிக்கணக்கான உறுப்பினர்களும் வாக்குகளும் வைத்துள்ளதாக கூறும் எந்த ஒரு அரசியல் கட்சியும் இந்த மாணவர் போராட்டங்களுக்கு மக்களை அணி திரட்ட முன்வருவதில்லை. அவர்களுக்கு அரசியல் என்பது வெறும் பிழைப்பு வாதமாக மட்டுமே இருக்கிறது. மக்களைத் தொடர்ந்து சிந்திக்க விடாமல் மதம் சாதி அல்லது கவர்ச்சிகரமான பிற விஷயங்களை வைத்து திசை திருப்பும் வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த கட்சிகள் எல்லாம் எதுவும் செய்ய மாட்டாங்க. ஜனநாயகத்தை காப்பாற்ற ஒரு கூட்டம் டெல்லியில் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இங்கே ஜனநாயகன் படத்தை காப்பாற்ற ஒரு கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது. அந்த கூட்டத்தை விட நீட் வேண்டாம் என்று போராடும் சிறுகூட்டம், அறிவார்ந்த கூட்டம் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும் என்று இயக்குனர் அமீர் பேசியிருக்கிறார்.





