தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். கடந்த 1975ம் ஆண்டில் அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் அறிமுகமான அவரது நிஜப் பெயர் சிவாஜி ராவ். இயக்குனர் கே பாலசந்தர் தான் ரஜினிகாந்த் என்று அவரது பெயரை மாற்றினார். அதுவே நிலைத்து விட்டது.
கடந்த ஆண்டில் தனது சினிமா பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா கொண்டாடிய ரஜினிகாந்த் இப்போது 75 வயதுகளிலும் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடித்த கூலி 171வது படமாக வெளியானது. இப்போது 172வது படமாக ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தலைவர் 173 படத்தில் நடிக்கிறார். அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கமலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படி அடுத்தடுத்த லைன் அப்கள் ரஜினிக்கு இருந்து வருகின்றன. ஆனால் 75 வயதுகளுக்கு பிறகு இனி ஓய்வுக்கு வந்துவிடலாம் என்ற ஒரு முக்கிய முடிவுக்கு ரஜினி வந்துவிட்டதாக தெரிகிறது.
ஏனெனில் இப்போது ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் மூலம் தனக்கு வரும் மொத்த வருவாயையும் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கொடுத்து விடுவது என ரஜினிகாந்த் முடிவு செய்திருக்கிறார். அடுத்து தனது கடைசி படம் மூலம் வருகிற வருமானத்தை தனது இளைய மகளுக்கு தர அவர் முடிவு செய்திருக்கிறார்.
அந்த வகையில் ரஜினிகாந்த் நடிக்கும் கடைசி படத்தை அவரது இளைய மகள் சௌந்தர்யா தான் தயாரிக்க உள்ளார். அடுத்து ரஜினியின் 175வது படமாக இருக்கலாம். 176வது படமாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் சௌந்தர்யா தயாரிக்கும் படம்தான் ரஜினிகாந்தின் கடைசி படமாக இருக்கும் என்கிற முடிவுக்கு ரஜினிகாந்த் வந்திருக்கிறார்.
அதனால் இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் சினிமா நடிப்பில் இருந்து ஓய்வு பெறும் முடிவுக்கு ரஜினியும் அவரது குடும்பத்தாரும் வந்திருப்பது உறுதியாகி விட்டது. ஆனால் இது ரஜினி ரசிகர்களுக்கு தான் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. அதே நேரத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் போன்று அவ்வப்போது கேமியோ ரோல்களில் ரஜினிகாந்த் நடிக்க வாய்ப்புள்ளது.





