நடிகர் ராமராஜன் தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் கொடி கட்டிப் பறந்த முன்னணி நட்சத்திர நடிகர். அவர் நடித்த கரகாட்டக்காரன் படம் இன்று வரை தமிழ் சினிமா கொண்டாடிய 10 முக்கிய படங்களில் ஒன்றாக உள்ளது. ராமராஜன் நடித்த கிராமத்து படங்கள் இப்போதும் ரசிக்கும் சிறந்த படங்களாக உள்ளன.
சமீபகாலமாக நடிகர் ராமராஜன் சினிமாவில் நடிப்பது இல்லை. அவர் நடித்த ஓரிரு படங்களும் சரியாக போகாத நிலையில் அதிமுகவில் அவர் இருந்து வருகிறார். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ராமராஜனை ராஜ்யசபா எம்பியாக்கி அழகு பார்த்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ராமராஜனுக்கு அதிமுக அதிக முக்கியத்துவம் தரவில்லை.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் நடிகர் ரஜினிகாந்த் தர்மன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்கிறார். தர்மன் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 173 வது படமான இந்த படத்துக்கு தர்மன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் தர்மதுரை என்ற படத்தில் நடித்தார். அந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு அதே பெயரில் பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் சேதுபதியும் ஒரு படத்தில் நடித்து அந்த படமும் வெளியாகி வெற்றி பெற்றது.
இப்போது நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தின் டைட்டில் நடிகர் ராமராஜன் நடிக்க இருந்த ஒரு படத்தின் டைட்டில் என தெரிய வந்துள்ளது. மறைந்த தயாரிப்பாளர் வி ஏ துரை தயாரிப்பில் காவேரி வேந்தன் இயக்கத்தில் ராமராஜன் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்க ஒரு படத்தில் கமிட் ஆனார். அந்த படத்துக்கு தர்மன் என்று டைட்டில் வைக்கப்பட்டது.
கடந்த 2005ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தர்மன் படத்தின் படப்பிடிப்பு நிதி சிக்கலால் 15 நாட்கள் மட்டுமே நடந்த நிலையில் அந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு அந்த படப்பிடிப்பு நடக்கவில்லை. அந்த படமும் அப்படியே நின்று போனது. இந்த நிலையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ராமராஜன் நடிக்க இருந்த தர்மன் என்ற பட டைட்டிலில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.





