தமிழ் சினிமாவில், சாதாரண நிலையில் இருந்து எப்படியோ ஒரு சூழலில் இயக்குநரின் கண்ணில் பட்டு, நினைவில் சிக்கி ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெறும் நடிகர்கள் பலர் உள்ளனர். அப்படி ஒரு படத்தில் நடித்து, ரசிகர்களுக்கு மிக பிடித்துப் போய், தொடர் பட வாய்ப்புகளை பெற்று முன்னேறிய நடிகர், நடிகைகளும் தமிழ் சினிமாவில் உள்ளனர்.
ஆனால் அப்பா நடிகர், அம்மா நடிகை, அப்பா இயக்குநர், அம்மா டைரக்டர் என தமிழ் சினிமாவில் நடிகர்களாக, நடிகைகளாக வலம் வந்தவர்களும் அதிகம். இப்போதும் அதுபோன்று சிலர் இருப்பதும் உண்மை. அப்படி வந்த சிலர், முக்கிய நடிகர்களாக தன் திறமையால் வெற்றி பெற்றிருக்கின்றனர். பலர் காணாமல் போய் இருக்கின்றனர்.
தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம்சரண். ஏற்கனவே சில படங்களில் அவர் நடித்திருக்கிறார். அதாவது அவர் தெலுங்கில் நடித்த படங்களில் தமிழில் டப் செய்து, தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திருக்கின்றனர். அந்த வகையில் மாவீரன், ஆர்ஆர்ஆர் படங்களின் வாயிலாக ராம் சரண், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர்தான்.
பெரிய நடிகரின் மகனாக இவர், சினிமாவை பொருத்த வரை இன்னொரு சிலம்பரசன் எனக் கூறப்படுகிறது. அதாவது ஆரம்ப காலத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துவிட்டு, சரியாக போகமாட்டார். இதனால், பல நாட்கள் படப்பிடிப்பு பாதிக்கப்படும். அதே போல் ராம் சரணும் 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால், இரண்டு நாட்கள் போய்விட்டு 18 நாட்கள் படப்பிடிப்புக்கு வரமாட்டாராம்.
ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் கேம் சேஞ்சர் என்ற படம், ஆண்டுக்கணக்கான படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், இன்னும் ஷூட்டிங் முடியவில்லை. சில மாதங்கள் எடுப்பது, சில மாதங்கள் இடைவெளி என இப்படியே தாமதம் நீடிக்கிறது. இயக்குநர் ஷங்கரையே இப்படி டென்சனாக்கி கொண்டிருக்கும் ஒரே ஹீரோ, ராம்சரணாக தான் இருப்பார் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியன் 2 படத்தில், கேம்பியோ காட்சிகளில் ராம்சரண் வருவதாக ஒரு தகவல் பரவியது. அவர் அப்படி எதுவும் அந்த படத்தில் வருவதற்கான ஐடியாவே இல்லை என விசாரித்த போது தெரிய வந்திருக்கிறது. அவர் நடிக்கும் சொந்த படத்திற்கே, ஒழுங்காக நடிக்க வராத அவரை, யாருமே சில காட்சிகளில் நடிக்க கூட நம்பி அழைக்க முடியாது என்கின்றனர் விவரமறிந்த சில இயக்குநர்கள்.





