இயக்குனர் சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சமுத்திரக்கனி. அடுத்து சசிக்குமார் ஹீரோவாக நடித்த நாடோடிகள் என்ற படத்தை இயக்கினார். 2 படங்களுமே சூப்பர் ஹிட் படங்களாக வெற்றி பெற்ற நிலையில் சசிக்குமார், சமுத்திரக்கனி இருவருமே தமிழ் சினிமாவில் முக்கிய இடத்துக்கு வந்துவிட்டனர்.
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் தன் ஆளுமையால் முன்னணி நட்சத்திரமாக உள்ள சமுத்திரக்கனி, இப்போது திரு மாணிக்கம் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். வருகிற 20ம் தேதி அந்த படம் வெளியாக உள்ளது. அதனால் திரு மாணிக்கம் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் சமுத்திரக்கனி பங்கேற்று வருகிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் சமுத்திரக்கனி கூறியதாவது, நான் ஆரம்பத்தில் சில டிவி சீரியல்களில் நடித்திருக்கிறேன். முதலில் ஒரு சீரியலில் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க போயிருந்தேன். அப்போது நான் மிகவும் ஒல்லியாக இருப்பேன். அந்த காட்சியில் நாடகத்தில் நடிக்கும் ஒரு நடிகர் என்னை உதைக்க வேண்டும்.
ஆனால் அந்த இயக்குனர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. அந்த நடிகரை கூப்பிட்டு இப்போது நீ அவனை உதைக்கிற மாதிரி ஒரு சீன் உள்ளது. அப்போது, நீ உதைக்கிற உதையில் அவன் வெளியே போய் விழணும். அதற்கு பின் அவனுக்கு சினிமா ஆசை எப்போதுமே வரக்கூடாது. சினிமாவை எப்போதும் அவன் நினைத்துக் கூட பார்க்க கூடாது என்று கூறிவிட்டார்.
அந்த இயக்குனரின் பேச்சைக் கேட்டு அந்த நடிகரும் என்னை மிதி மிதி என மிதித்தார். இன்னும் சொல்லப்போனால் அந்த சீனில் நான் பலமுறை அவரிடம் மிதி வாங்கினேன். ஆனால் அந்த இயக்குனர் கூறியதைப் போல் எனது சினிமா கனவை நான் விடவே இல்லை.அதற்குபிறகு அந்த இயக்குனரிடமே ரொம்ப நாள் வேலை பார்த்தேன். அவர் என்னை விடவே இல்லை.
என்னை மிதி மிதி என மிதித்த அந்த நடிகர் இப்போதும் என்னை பார்த்தால், மன்னிப்பு கேட்பார். அன்னைக்கு நான் வாங்கிய மிதியால்தான் இன்றைக்கு சினிமாவில் நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக வளர்ந்து நிற்கிறேன். நேர்மை, உழைப்பை மட்டுமே நம்பி சினிமாவில் எனது பயணத்தை தொடங்கியவன், இன்றைக்கும் அப்படித்தான் இருக்கிறேன் என்று சமுத்திரக்கனி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





