தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் சந்தானம். அவரது டயலாக் டெலிவரி எப்போதுமே ரசிகர்களுக்கு குபீர் சிரிப்பை வரவழைக்கும். ஆரம்பத்தில் பல படங்களில் காமெடி நடிப்பை வெளிப்படுத்திய சந்தானம், பிறகு ஹீரோவாக மாறிவிட்டார். இதுவரை பல படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார்.
ஆனால் தமிழ் சினிமாவில் இப்போது காமெடி நடிகர்கள் இல்லாத சூழலில் காமெடி படங்களுக்கு பெரிய பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சூரியும் ஹீரோவாகி விட்டதால் யோகிபாபு மொட்டை ராஜேந்திரன் கிங்ஸ்லி போன்றவர்களை வைத்து தமிழ் சினிமாவில் காமெடி என இயக்குனர்கள் ஒப்பேத்திக் கொண்டு இருக்கின்றனர்.
வடிவேலு நடிப்பில் முன்பு போல காமெடி ரசிகர்களிடம் எடுபடவில்லை. அவரும் சிவலிங்கா கத்தி சண்டை எலி சந்திரமுகி 2 கேங்கர்ஸ் உள்ளிட்ட பல படங்களில் காமெடியாக நடித்தும் ஏமாற்றமான நிலையில் மீண்டும் குணச்சித்திர நடிப்புக்கு மாறிவிட்டார். சமீபத்தில் மாரீசன் படத்தில் அவர் ஏறக்குறைய கதாநாயகனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜ ராஜா படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியானது. இதில் நடிகர் சந்தானம் காமெடி நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதனால் தமிழ் சினிமாவில் நிலவி வரும் காமெடி பஞ்சத்தை போக்க மீண்டும் சந்தானம் காமெடி ரோலில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சந்தானம் கூறியதாவது, சின்ன வயசுல ரொம்ப நாளா நான் சினிமாவில் வர்ற கேஆர் விஜயா தான் உண்மையான அம்மன்னு நினைச்சுட்டு இருந்தேன். நான் பரீட்சை எழுதும் போது கூட கேஆர் விஜயா போட்டாவை பரீட்சை அட்டையில் ஒட்டிக்கொண்டு போவேன்.
ஒரு பாயிண்டுக்கு அப்புறம்தான் இவங்க எல்லாம் நடிகை, சாமி கிடையாதுன்னு எனக்கே தெரிஞ்சுது. இன்னைக்கு நான் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் போட்டோவை எடுத்து என் பையன் கிட்ட காட்டி, இவங்க தான் அம்மன் என்று சொன்னால் அவன் ஏத்துப்பானா? அன்னைக்கு நாம இருந்த காலம் வேற, இப்ப பசங்க இருக்கிற காலம் வேற என்று நடிகர் சந்தானம் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். 1980களில் கேஆர் விஜயா பல படங்களில் அம்மனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





