கடந்த பல ஆண்டுகளாக பிரமாண்ட வெற்றிக்காக காத்திருந்த நடிகர் சூர்யாவுக்கு இதுவரை கிடைக்காத ஒரு சூப்பர் மாஸ் வெற்றி இப்போது கிடைத்திருக்கிறது. கடந்த மே மாதம் 15ம் தேதி ரிலீஸான கருப்பு படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவுடன் திரிஷா ஆர்ஜே பாலாஜி மலையாள நடிகர் இந்திரன்ஸ் மன்சூர் அலிகான் நட்டி நடராஜ் சுவாசிகா ஷிவதா ஜார்ஜ் மரியம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளது.
நடிகர் சூர்யா நடித்த படங்களில் சிங்கம் 2 படம்தான் அதிகபட்சமாக ரூ. 160 கோடி வசூலித்து சாதனை செய்திருந்தது. ஆனால் இப்போது வெளியான கருப்பு படம் இரண்டே வாரங்களில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. இந்த படத்தில் வேட்டை கருப்பு சாமியாக சூர்யா நடித்திருக்கிறார்.
இந்நிலையில் கருப்பு படம் வெளியாகி 19 நாட்கள் ஆன நிலையில் இந்த படம் உலகளவில் மொத்தம் 315 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டுமே 190 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த படம் சூர்யாவின் திரை பயணத்தில் ஒரு திருப்புமுனையாக மாறியிருக்கிறது.
கருப்பு படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா மமிதா பைஜூ நடித்த படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறது.
கருப்பு படத்தின் அபார வெற்றி மற்றும் வசூல் காரணமாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் சாட்டிலைட் உரிமம் டிஜிட்டல் ஓடிடி உரிமம் மற்றும் ஆடியோ ரைட்ஸ் என்ற வகையில் இப்போதே 120 கோடி ரூபாய் லாபம் கிடைத்து விட்டது. அதனால் தியேட்டர்களில் இந்த படத்துக்கு கிடைக்கும் வரவேற்பும் லாபமும் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஜாக்பாட் தான் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.





